அரசியல்உள்நாடு

ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் – மனோ கணேசன் எம்.பி

நீதியான விசாரணை”, “வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை (15) நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம் என தெரிவித்து அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஐந்து தமிழ் இளைஞர்கள், 8 ஆம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

தப்பிச் சென்றவர்களில் ஒருவரான, கபில்ராஜ், 9 ஆம் திகதி முல்லை முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்கபட்டுள்ளார்.

தப்பிச் சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆகவே என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழரசு கட்சி, “நீதியான விசாரணை”, “ வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம்.

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க, இது தொடர்பில் உடன் விசாரணை, தண்டனைக்குரிய சட்ட நடவடிக்கை, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.

அத்துடன் இதை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“இராணுவ பிரசன்னம் குறைப்பு” என்பதுதான் இந்த ஹர்த்தால் சொல்ல போகும் செய்தி.

போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும்.

எனவே அவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து, “குளம் வெட்டுவது, குளத்தில் தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது, காய்கறி சந்தை நடத்துவது” போன்ற இன்ன பிற அபிவிருத்தி பணிகளில், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க, ஈடுபடுத்த வேண்டும்.

“இதற்கு முன் இப்படியான சம்பவங்கள் நடக்க வில்லையா? அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?” என எம்மை பார்த்து, தம்மை அறிவாளிகள் என நினைத்து கொண்டு, கேள்வி கேட்கும், ஜேவிபி அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோரின் வாய்களையும் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க மூட வேண்டும்.

“அன்றைய அரசுகள் மாறி, மாறி செய்தவற்றை செய்ய நாம் வரவில்லை. மாற்றி செய்யவே நாம் வந்தோம்”, என நீங்கள் தான் மக்களுக்கு கூறினீர்கள். அதையே தான் நீங்களும் செய்ய வந்தீர்கள் என்றால், நாம் எதிர்க்கத்தான் செய்வோம்.

அரச இராணுவ பயங்கரவாதத்தை, நாம் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்கிறோம். எப்போதும் எதிர்ப்போம்.

வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடை பெற அழைப்பு விடுத்து இருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கோரிக்கையை, தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்று, ஆதரவை அறிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

MTFE SL நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய பணிப்புரை

முல்லைத்தீவில் ஆயுதங்கள், தங்கம் தேடிய அகழ்வுப் பணி இரண்டாவது நாளாக முன்னெடுப்பு!