அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

வேல்ஸ் இளவரசரின் ஆதரவை கோரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக் (Andrew Patrick) ஆகியோர் இன்று (26) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

நாட்டில் காணப்பட்டு வரும்
மனித-யானை மோதலைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேல்ஸ் இளவரசரின் ஆதரவைக் கோரி, வேல்ஸ் இளவரசருக்கு அனுப்புவதற்காக எழுதிய கடிதத்தை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் கையளித்தார்.

ஆசிய வகை மிகப்பெரிய எண்ணிக்கையிலான யானைகளின் ஓர் வாழ்விடமாக காணப்படும் இலங்கையில் சுதந்திரமாக சுற்றித் திரியும் யானைகளைப் பாதுகாப்பதற்கு வேல்ஸ் இளவரசரின் விலைமதிப்பற்ற ஆதரவைப் பெற்றுத் தருமாறு இந்த கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்தார்.

ஒவ்வொரு வருடமும் 400 க்கும் மேற்பட்ட யானைகளும், 150 க்கும் மேற்பட்ட மனித இறப்புகளுக்கு நிகழ்ந்து, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த மனித-யானை மோதலைத் தடுப்பதற்கு விஞ்ஞான அறிவியல் அடிப்படையிலான தேசிய காப்பிட மூலோபாயத் திட்டமொன்றின் அவசரத் தேவையையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு எடுத்துரைத்தார்.

இதன் பிரகாரம், நீண்ட கால, நிலைபேறான சட்டகத்தின் கீழ், வனப் பாதுகாப்பு நிபுணர்கள், உள்நாட்டு சமூகங்கள் மற்றும் சர்வதேச பங்குதாரர்களையும் ஒன்றாக இணைத்துக் கொண்ட தேசிய யானைப் பாதுகாப்பு மற்றும் சகவாழ்வு முன்முயற்சியைத் ((NECCI) தாபிப்தற்கும் இந்தக் கடிதத்தின் மூலம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்;

“இலங்கையின் யானைகள் எமது தேசிய பாரம்பரியம் மட்டுமல்லாது, அவை உலகளாவிய பல்லுயிர் பெருக்கத்தின் ஓர் புதையல் ஆகும்.

எனவே வேல்ஸ் இளவரசரின் தலைமைத்துவம் மற்றும் காப்பீட்டு வலையமைப்புடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதால் எமது வனவிலங்குகளுக்கும் எமது சமூகங்களுக்கும் ஒரு நிலையான எதிர்காலத்தை எம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும்.” என்று தெரிவித்தார்.

அவ்வாறே இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்;

“இலங்கையின் தனித்துவமான வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை ஐக்கிய இராச்சியம் பெரிதும் மதிக்கிறது.

காட்டு யானைகளைப் பாதுகாப்பது இலங்கைக்கு மட்டுமல்ல, முழு உலகிற்குமே அவசியமான ஓர் விடயமாகும்.

எனவே, இந்த முன்முயற்சி காலத்திற்கேற்றதும் அவசியமானதும் ஒன்றாகும். காட்டு யானைகளின் பாதுகாப்பு மற்றும் யானை மனித சகவாழ்வுக்கு நீடித்த தீர்வுகளைக் கண்டறிவதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் காணப்படும் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்.” என்றார்.

Related posts

இன்றும் நேர அட்டவணைக்கு ஏற்ப மின்வெட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 38 கோப்புகள் பதில் பொலிஸ்மா அதிபருக்கு

குளவிக் கொட்டுக்குள்ளான பெண்ணொருவர் உயிரிழப்பு