சில வருடங்களுக்கு முன்பு, இந்நாட்டில் மிகவும் ஊழல் நிறைந்த மற்றும் மோசடியான தரமற்ற மருந்து மோசடி நடந்து கொண்டிருந்த வேளை, அதை நாட்டுக்கு வெளிக்கொணர்ந்து, அம்பலப்படுத்தி, அப்போதைய சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கூட ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டு வந்தது.
அப்போது நடந்து வந்த இந்த தரமற்ற மருந்து மோசடிகள் புதிய அரசாங்கத்துடன் முடிவுக்கு வரும் என்றே கருதப்பட்டன.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழும் தரமற்ற இந்த மருந்து மாபியா தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் தரமற்ற தடுப்பூசிகளால் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தரமற்ற தடுப்பூசிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் கொள்வனவு மோசடி இன்றும் நடந்தே வருகிறது.
மருந்துப் பொருட்கள் மோசடியைத் தொடர்வதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் தமது ஆணையைப் பெற்றுத் தரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டம், மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு 46.5 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (28) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மஹியங்கனை ஆதார வைத்தியசாலை கடுமையாக சேதமடைந்தது.
ஆகையால், இந்த வைத்தியசாலையின் தேவைப்பாடுகளை அடையாளம் கண்டு ரூபா.38 இலட்சம் பெறுமதியான Dialog Single Pump ஒன்றும், ரூபா.7.6 இலட்சம் பெறுமதியான Blue dot RO System 600Gpd இயந்திரமொன்றும் இன்று இவ்வாறு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
சிறுநீரக நோயாளிகளின் நலன் கருதியே இந்த உபகரணத் தொகுதிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் தொடர்பில் குரல் எழுப்பிய சமயங்களில், தற்போதைய அரசாங்கத்தைச் சேர்ந்த அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்து மௌனம் காத்து வந்தனர்.
தரமற்ற மருந்துப் பொருட்கள் கொள்வனவை நிறுத்துவோம் என்று தேர்தல் மேடைகளில் கோஷங்களை எழுப்பிய தற்போதைய ஆளும் தரப்பு அமைச்சர்கள், இன்று மக்களுக்கு தரமற்ற மருந்துகளையும் தடுப்பூசிகளையும் விநியோகித்து வருகின்றனர்.
தற்போதைய சுகாதார அமைச்சர் உட்பட அனைத்து சுகாதார அதிகாரிகளும் இந்த மருந்துப் பொருட்கள் மாபியாவை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தரமற்ற மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து பார்ப்பதற்காக பொருத்தமான கட்டமைப்பை நாம் இப்போதாவது ஸ்தாபிக்க வேண்டும்.
இந்த மருந்துப்பொருள் மாபியாவால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பரிதாபமாக பலியாகி வருகின்றன. மருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் போது, அவை தரமானதா, நுகர்வுக்கு ஏற்றனவா என தகுதிச் சான்றிதழ் வழங்கும் முன்னர், சுகாதார அமைச்சும் போலவே இந்த மருந்துகளின் தரம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிசோதனைகள் மூலமும் சர்வதேச நிறுவனங்கள் மூலமும் இவை ஆராயப்பட வேண்டும்.
நமது நாட்டில் இன்னும் மருந்துகளின் தரத்தை சரிபார்க்கக்கூடிய பரிசோதனை ஆய்வு கூடமோ வசதிகளோ இல்லை. இதற்கான ஆய்வு கூட வசதிகளை நாம் நிறுவ வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்தப் பொறுப்பிலிருந்து அமைச்சர் தப்பிக்க முடியாது.
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் தொடர்பான பொறுப்பிலிருந்து அமைச்சரும் உரிய அதிகாரிகளும் தப்பிக்க முடியாது. முன்னாள் அமைச்சரைப் போலவே தற்போதைய சுகாதார அமைச்சரும் இந்தப் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
220 இலட்சம் மக்கள் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் வீதிகளில் இறங்கி, இந்த தரமற்ற மருந்து மோசடியை நடத்தும் அனைவருக்கும் எதிராகவும் இந்த மாபியாவிற்கு எதிராகவும் பேராடும்.
அவ்வாறே, இந்த தரமற்ற மருந்துப் பொருட்கள் மோசடியை ஒழிப்பதற்கு இந்த அரசாங்கம் எடுக்கும் சிறந்த சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சி பூரண ஆதரவைப் பெற்றுத் தரும்.
அடிப்படையானதும் மனித உரிமையாகவும் காணப்படும் சுகாதார நலன் கருதி, சேனக பிபில மருந்துக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
