வில்பத்து தேசிய பூங்காவில் கூடாரங்களை அமைத்து, காட்டு விலங்குகளைக் கொன்று பாரிய மோசடி ஒன்று முன்னெடுக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வில்பத்து தேசிய பூங்காவின் தெல்பீபுவெவ பிரதேசத்தை அண்மித்த பகுதியில் கூடாரங்களை அமைத்து காட்டு விலங்குகளை வேட்டையாடி, நெருப்பு மூட்டி இறைச்சியை உலர்த்தும் மோசடியை முன்னெடுத்து வந்த வேட்டைக்காரர்கள் குழுவொன்றுடன் துப்பாக்கிகள் மற்றும் பெருமளவான இறைச்சித் தொகையைக் கைப்பற்ற வனஜீவராசிகள் அதிகாரிகள் நேற்று (19) நடவடிக்கை எடுத்திருந்தனர்.
வனஜீவராசிகள் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது போர்-12 (12-bore) ரக துப்பாக்கி ஒன்றுடன் 18 தோட்டாக்கள், 14 வெற்றுத் தோட்டா உறைகள் ஆகியவற்றுடன் 66 கிலோகிராம் புள்ளிமான் இறைச்சி, 18 கிலோகிராம் காட்டுப்பன்றி இறைச்சி உள்ளிட்ட இந்தப் பாரிய மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை வனஜீவராசிகள் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இச்சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்குரிய மூன்று வேட்டைக்காரர்களைக் கைது செய்ய முடிந்த அதேவேளை, மேலும் மூவர் தப்பியோடியுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மோசடிக்காரர்கள் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் வில்பத்து தேசிய பூங்காவிற்குள் நுழைந்து, அங்கு கூடாரங்களை அமைத்து இந்த மோசடியை மேற்கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வில்பத்து தேசிய பூங்காவிற்கு அண்மித்த கிராமங்களில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
