உள்நாடு

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – இலங்கை மத்திய வங்கி

வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தபடி, வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பாக இலங்கை மத்திய வங்கிக்கும் மற்றும் திறைசேரிக்கும் இடையில் எந்தவொரு கடிதப் பரிமாற்றமோ அல்லது தொடர்பாடலோ இடம்பெறவில்லை என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டு, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டது.

அதன்படி, 2025 பெப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை சுமார் 18,000 மோட்டார் வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதில், குறித்த காலப்பகுதியில் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் 13,614 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, கடந்த பெப்ரவரி முதல் கடந்த 5 மாதங்களில் வாகன இறக்குமதிக்காக 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதில், இதுவரை 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில், சில ஊடகங்கள் இன்று (07), வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கி திறைசேரிக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக எமது செய்திப் பிரிவு இன்று இலங்கை மத்திய வங்கியிடம் வினவியிருந்தது.

திறைசேரிக்கும் மத்திய வங்கிக்கும் இடையில் வாகன இறக்குமதி தொடர்பாக எந்தவொரு கடிதப் பரிமாற்றமோ அல்லது தொடர்பாடலோ இடம்பெறவில்லை என மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு வழிகாட்டுதலோ அல்லது பரிந்துரையோ இலங்கை மத்திய வங்கியால் திறைசேரிக்கு வழங்கப்படவில்லை என்று அந்த சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.

வாகன இறக்குமதியின் போது, மத்திய வங்கியின் வெளிநாட்டு இருப்புகளுக்கு (foreign reserves) எந்தவொரு தாக்கமும் ஏற்படாது என்றும், வாகன இறக்குமதி நாட்டின் வணிக வங்கி முறைமையில் உள்ள டொலர் இருப்புகளில் இருந்து மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

தற்போது, இலங்கை மத்திய வங்கியிடம் 6.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு கையிருப்பு உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார ஆய்வாளர்கள், வாகன இறக்குமதியின் போது மத்திய வங்கியின் டொலர் இருப்புகளுக்கு எந்தவொரு தாக்கமும் இல்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான பின்னணியில், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சந்தை மதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது.

Suzuki Wagon R FX-S: ஜப்பானில் 36 இலட்சம் ரூபாவாக உள்ள இந்த வாகனம், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும்போது 38 இலட்சம் ரூபா வரி விதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி மதிப்பு 74 இலட்சம் ரூபாவாக இருந்தாலும், இது இலங்கையில் சுமார் 86 இலட்சம் ரூபாவுக்கு விற்பனையாகிறது.

Toyota Raize 1200cc Hybrid: ஜப்பானில் 74 இலட்சம் ரூபாவாக உள்ள இந்த வாகனத்திற்கு இலங்கையில் 64 இலட்சம் ரூபா வரி விதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி மதிப்பு 138 இலட்சம் ரூபாவாக இருந்தாலும், இது சுமார் 165 இலட்சம் ரூபாவுக்கு விற்பனையாகிறது.

Honda VEZEL X: ஜப்பானில் 88 இலட்சம் ரூபாவாக உள்ள இந்த வாகனத்திற்கு 90 இலட்சம் ரூபா வரி விதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி மதிப்பு 178 இலட்சம் ரூபாவாக இருந்தாலும், இது சுமார் 210 இலட்சம் ரூபாவுக்கு விற்பனையாகிறது.

Toyota Hilux GR Sport: தாய்லாந்தில் 150 இலட்சம் ரூபாவாக உள்ள இந்த வாகனத்திற்கு 130 இலட்சம் ரூபா வரி விதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி மதிப்பு 285 இலட்சம் ரூபாவாக இருந்தாலும், இது சுமார் 320 இலட்சம் ரூபாவுக்கு விற்பனையாகிறது.

Toyota Yaris Cross: ஜப்பானில் 65 இலட்சம் ரூபாவாக உள்ள இந்த வாகனத்திற்கு 89 இலட்சம் ரூபா வரி விதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி மதிப்பு 154 இலட்சம் ரூபாவாக இருந்தாலும், இது சுமார் 195 இலட்சம் ரூபாவுக்கு விற்பனையாகிறது.

Toyota Land Cruiser Prado 250: உற்பத்தி நாட்டில் 180 இலட்சம் ரூபாவாக உள்ள இந்த வாகனத்திற்கு இலங்கையில் 400 இலட்சம் ரூபா வரி விதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி மதிப்பு 585 இலட்சம் ரூபாவாக இருந்தாலும், இது சுமார் 650 இலட்சம் ரூபாவுக்கு விற்பனையாகிறது.

இதற்கிடையில், இறக்குமதி சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறி, வாகன இறக்குமதியாளர்களால் சுமார் 300 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாகனங்கள் தொடர்பாக எடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, நிதி அமைச்சு இலங்கை சுங்கத் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கவுள்ளது

Related posts

வழமைக்கு திரும்பும் தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணை வெளியீடு

editor

மிகைக்கட்டண வரி சட்டமூலம் நிறைவேற்றம்