2025 ஆம் ஆண்டிற்காக நிதி அமைச்சினால் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்த வருமான இலக்கை விடவும் அதிக வருமானத்தைத் திரட்ட முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,497 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி இலங்கை சுங்கத் திணைக்களம் சாதனை படைத்துள்ளது.
இது குறித்து சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான திரு. சந்தன புஞ்சிஹேவா கருத்து தெரிவிக்கையில்:
2025 ஆம் ஆண்டிற்காக நிதி அமைச்சு முதலில் வழங்கிய இலக்கு 2,115 பில்லியன் ரூபா ஆகும்.
பின்னர் நவம்பர் மாத அளவில் இந்த வருமான இலக்கானது 2,115 பில்லியனில் இருந்து 2,231 பில்லியன் ரூபா வரை திருத்தப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போது ஈட்டப்பட்டுள்ள வருமானம் அந்த திருத்தப்பட்ட இலக்கையும் விட அதிகமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
சுங்கத் திணைக்களத்திற்குள் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாகவே இந்த உயரிய வருமானத்தை ஈட்ட முடிந்ததாக திரு. சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.
