முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் இன்று (17) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
தேறாங்கண்டல் பகுதியில் உள்ள வயல் காவலுக்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் இன்று அதிகாலை மூவர் தங்கியிருந்தபோது, அங்கு வந்த காட்டு யானை திடீரெனக் கொட்டிலைச் சேதப்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்போது இருவர் தப்பியோடிய நிலையில், தேறாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த பொன்முடி சுஜீவன் என்ற 19 வயது இளைஞன் யானையின் தாக்குதலுக்கு இலக்காகிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு, மல்லாவி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். தற்போது உடல் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், விவசாயிகள் தமது வாழ்வாதாரச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-தவசீலன்
