உள்நாடுகட்டுரைகள்

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம் தேசிய துன்பியல் நிகழ்வாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்!

பொதுமக்களின் நினைவில் இருந்து பெரும்பாலும் மங்கிப்போன பெருங்குற்றம் ஒன்றின் 35 வது வருடாந்தம் அக்டோபர் 30 ஆம் திகதி குறித்து நின்றது.

வடக்கில் இருநது முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட பிறகு 35 வருடங்கள் கடந்து போனதை முன்னிட்டு ‘ வரலாற்றுப் பேச்சுவார்த்தை & நினைவுக்கான கூட்டமைப்பின் (Collective for Historical Dialogue & Memory ) ஒத்துழைப்புடன் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகம் ஒரு விவரணத் திரைப் படக்காட்சியையும் கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்திருந்தது.

1990 ஆம் ஆண்டில் அன்றைய தினம் வடக்கில் இருந்த முஸ்லிம் மக்கள் சகலரையும் சில மணி நேரத்திற்குள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறுமாறு விடுதலை புலிகள் உத்தரவிட்டனர்.

தமிழ் மக்களின் கலாசாரத் தலைநகரான யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் குடும்பங்கள் வெளியேறுவதற்கு இரு மணி நேரம் மாத்திரமே வழங்கப்பட்டது. வடக்கின் ஏனைய பாகங்களில் இந்த காலஅவகாசம் ஒன்று அல்லது இரண்டு நாட்களாக இருந்தது.

முஸ்லிம் மக்களிடம் உடைகளையும் ஒருசில உடைமைகளையும் மாத்திரமே எடுத்துச் செல்ல முடியும் கூறப்பட்டது. அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கு எதிராக எடு்கப்பட்ட ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என்று கூறி முஸ்லிம்களின் வெளியேற்றத்தை விடுதலை புலிகள் நியாயப்படுத்தினர்.

சோதனை நிலைகளில் விடுதலை புலிகள் அந்த மக்களிடமிருந்து பணம், நகைகள் மற்றும் சொத்துக்களின் உறுதிப்பத்திரங்களை பறிமுதல் செய்தனர். சில பெண்களிடமிருந்து அவர்களின் திருமண கழுத்துமாலை கழுத்தில் இருந்து அறுத்தெடுக்கப்பட்டது.

நியாயம் கேட்க முயன்றவர்களிடம் அல்லது மன்றாடியவர்களிடம் எல்லாமே தமிழீழத்தில் சம்பாதிக்கப்பட்டதே, அதனால் தமிழீழத்துக்கே அவை சொந்தமானவை என்று கூறப்பட்டது.

வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்துக்கும் அதிகம் என்று மதிப்பிடப்படுகிறது. பலர் புத்தளத்துக்கும் நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் நடந்தும் நெரிசல் மிகுந்த படகுகள் மூலமும் சென்றனர். அவர்கள் பாடசாலைகள், கோவில்கள் மற்றும் மரங்களின் கீழ் தூங்கினார்கள்.

இடம்பெயர்ந்த மக்களாக பல வருடங்களாக அவர்கள் வாழ்ந்தார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்களும் சிங்களவர்களும் மரணமடையவும் காயமடையவும் வீடுவாசல்களை இழக்கவும் காரணமான போர் முஸ்லிம் மக்களின் அவலங்களை மறைப்புச் செய்துவிட்டது.

பரந்தளவில் மூண்ட போரின் கிளைக்கதைகளில் ஒன்றாக — எந்தவிதமான விசேட முன்னுரிமையும் கொடுக்கப்படாததாக முஸ்லிம்களின் இந்த வெளியேற்றம் மாறியது. அதற்கு பிறகு அரசாங்கத்தினதும் சர்வதேச நிறுவனங்களினதும் கவனம் பரந்தளவில் இடம்பெயர்ந்த பத்து இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் மீது திரும்பியது.

வளங்கள் பற்றாக்குறையாக இருந்தபோது முன்னுரிமைகள் குறித்து தீர்மானிக்க வேண்டியிருந்தது. உயிர்களை அல்ல தங்களது நிலங்களையும் சொத்துக்களையும் இழந்த வடக்கு முஸ்லிம் உதவி வழங்கப்படுவோருக்கான பட்டியலில் தாழ்ந்த மட்டத்திலேயே விடப்பட்டனர்.

இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட தொடர்ந்தும் குறைவான கவனத்தையே பெற்றது. அவர்கள் தங்களது சொந்த இடக்களுக்கு திரும்புவதை தடுப்பதற்கு விடுதலை புலிகள் இல்லாவிட்டாலும் முடடுக்கட்டைகள் தொடரவே செய்கின்றன.

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு பின்னரான சுமார் இரு தசாப்தங்களில் அவர்களுக்குச் சொந்தமான நிலங்கள் கைமாறிவிட்டன.

மன்னார் மாவட்டத்தில் சுமார் 500 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தில் முஸ்லிம் சமூகங்கள் வாழ்ந்த முசலி போன்ற பகுதிகளில் இப்போது சுமார் 70 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலம் மாத்திரமே கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அதையும் கூட அவர்கள் இடம்பெயர்வுக்கு உள்ளான தமிழ்ச் சமூகங்களுடன் பகிர்ந்து கொள்வேண்டிய தேவை இருக்கிறது. விடுதலை புலிகளிடமிருந்து மீட்ட நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது.

அந்த நிலங்களை இராணுவம் மூலோபாய நோக்கங்களுக்காக தொடர்ந்தும் அதன் வசம் வைத்திருக்க விரும்புகிறது. வடக்கில் ஒரு சிறுபான்மையினராக தங்களை உணரும் முஸ்லிம்கள் தங்களது வலிமையற்ற நிலை காரணமாக இராணுவ பிரசன்னத்தையும் பொறுத்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது.

சமத்துவமாக நடத்துதல்

இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் பலர் தனிப்பட்ட முயற்சிகளின் ஊடாகவும் அரசாங்கம் மற்றும் உதவி நிறுவனங்களின் ஆதரவுடனும் வேறு இடங்களில் தங்களது வாழ்வை மீளக்கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அவர்கள் மீளக்குடியமர்ந்த இடங்களில் குறிப்பாக, புத்தளத்திலும் வடமேல் மாகாணத்திலும் காணிகளையும் வீடுகளையும் பெற்றிருக்கிறார்கள். இருந்தாலும், இந்த அருஞ்செயல்கள் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

வடக்கில் உள்ள அதிகாரிகள் அந்த மக்களை சிலவேளைகளில் பல்வேறு சொத்துக்களைக் கொண்டிருப்பவர்களாக கருதி உதவிகளை வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்று நடத்துகிறார்கள்.

இழந்த வீடுகளுக்கு அவர்கள் திரும்பும்போது இவ்வாறு நடக்கிறது. இத்தகைய அணுகுமுறை வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு மரபுரீதியான அவர்களின் வீடுகளுடன் இருக்கும் கலாசார மற்றும் உணர்வுபூர்வமான பிணைப்பை அவமதிப்பதாக இருக்கிறது.

அவர்களைப் பொறுத்தவரை, வடக்கிற்கு திரும்புவது என்பது மேலும் கூடுதல் சொத்துக்களை பெறுவது பற்றியதல்ல, தங்களது அடையாளத்தையும் பாதுகாப்பு உணர்வையும் மீட்டெடுப்பதாகும்

போரின் முடிவுக்கு பின்னர் நாட்டின் தென்பகுதியில் சிங்களவர்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகள் அடிக்கடி கிளம்பியது அந்த மக்களின் எதிர்காலம் பற்றிய அச்சவுணர்வை ஆழமாக்கியது.

முஸ்லிம்களுக்கு எதிராக உணர்வுகள் தூண்டிவிடப்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு சட்டத்தின் ஆட்சியை சகலருக்கும் சமத்துவமான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு குழுவினருக்கு எதிரான அநீதி சகித்துக் கொள்ளப்படுமானால், இறுதியில் அது சகலரையும் சூழ்ந்துவிடும்.

பாதுகாப்பு என்பது மேலாண்மையில் அல்ல,நீதி தங்களைப் பாதுகாக்கும் என்று சகல குடிமக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவதிலேயே தங்கியிருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் அனுகூலத்துக்காக இனத்துவ தேசியவாதம் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்ற அதன் வாக்குறுதிக்கு உண்மையாக நடந்து கொள்கிறது.

ஆனால், விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு நாட்டை ஐக்கியப்படுத்தல் மனங்களின் ஐக்கியமாக இன்னமும் மாற்றப்படவில்லை. சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக, தமிழர்களும் முஸ்லிம்களும் தீர்மானங்களை எடுக்கும் செயன்முறைகளில் இருந்து தாங்கள் விலக்கி வைக்கப்படுவதாகவும் பாரபட்சங்களினாலும் வன்முறைகளினாலும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதாகவும் இன்னமும் உணருகிறார்கள்.

சகல குழுக்களினதும் மனக்குறைகள் நேர்மையான முறையில் கையாளப்படுவதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகும்.

போர்க்கால இடம்பெயர்வின் பின்னணியில் நோக்கும்போது இடம்பெயர்ந்த சகல மக்களும் — தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் — தங்களது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கான உரிமையை உறுதி செய்யும் கொள்கை ஒன்றை அரசாங்கம் பிரகடனம் செய்ய வேண்டியதும் அந்த கொள்கை ஔிவுமறைவின்றி நடைமுறைப்படுத்துவதற்கு நிருவாகப் பொறிமுறை ஒன்றை நிறுவவேண்டியதும் அவசியமானதாகும்.

தேசிய நல்லிணக்கத்துக்கான கட்டமைப்பின் ஒரு அங்கமாக நிறுவப்பட்ட இழப்பீட்டுக்கான அலுவலகம் இது விடயத்தில் முக்கியமான பாத்திரத்தை வகிக்க முடியும்.

இழப்பீடு என்பதன் அர்த்தம் பாதிக்கப்பட்டவர்களை, வன்முறைகள் இடம்பெறாமல் இருந்திருந்தால் அவர்கள் எத்தகைய நிலையில் இருந்திருப்பார்களோ அந்த நிலைக்கு சாத்தியமானளவுக்கு மீளக்கொண்டு வருவதேயாகும்.

அநீதியை நினைவுகூருதல்

சகவாழ்வின் பிணைப்புகள் முறியும்போது என்ன நடக்கலாம் என்பதற்கு வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை வேதனை மிகுந்த ஒரு நினைவூட்டியாக விளங்குகிறது.

மனிதாபிமானத்தை இனத்துவ தேசியவாதம் விஞ்சும்போது என்ன நடக்கிறது என்பதற்கு வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றம் ஒரு எச்சரிக்கையாகும். துன்பமும் வேதனையும் ஒரு சமூகத்துக்கு மாத்திரம் மட்டுப்பட்டதாக இருப்பதில்லை என்பதையும் அது நினைவூட்டுகிறது.

1990 அக்டோபரை நினைவுகூருவது எந்த ஒரு குடிமகனும் அவரது அடையாளம் காரணமாக வீட்டிலிருந்து மீண்டும் ஒருபோதும் விரட்டப்படாதிருப்பதை உறுதிசெய்வதற்கு சகல இலங்கையர்களுக்கு விடுக்கப்படும் அழைப்பாகும். ஒவ்வொரு சமூகமும் அதன் மௌனத்தையும் தவறுகளையும் குறித்து மீள்சிந்தனை செய்ய வேண்டிய அவசியத்தையும் அது வலியுறுத்துகிறது.

ஒவ்வொரு சமூகமும் அதனால் விழைவிக்கப்பட்ட வேதனைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு மற்றைய சமூகத்துக்கு நேசக்கரத்தை நீட்டும்போது உண்மையான நல்லிணக்கம் தொடங்குகிறது.

அரசாங்கம் சிவில் சமூக அமைப்புக்களுடன் சேர்ந்து பேச்சுவார்த்தைக்கும் பரஸ்பர புரிந்துணர்வுக்குமான இடப்பரப்பை உருவாக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது அவசியமானதாகும். போர் சகல சமூகங்களையும் பாதித்திருக்கிறது.

அதனால் ஒவ்வொரு சமூகத்தினதும் குரலுக்கு மதிப்புக் கொடுத்து நேர்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டியது நல்லிணக்கத்துக்கு அவசியமாகும். ஒரு குழுவின் துன்பம் கவனிக்கப்படாமல் போகும்போது எதிர்ப்புணர்வு வளர்ந்து அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பலவீனமடைகிறது.

அதனால் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தனியொரு சமூகத்தின் உள்விவகாரமாக அலாலாமல், ஒரு தேசிய துன்பியல் நிகழ்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

35 வருடக்களக்கு பின்னரும் கூட, வடக்கு முஸ்லிம்கள் இன்னமும் தங்களுக்கான நீதியை பெறவில்லை என்பதும் வழமையான வாழ்வுக்கு முழுமையாகத் திரும்பவில்லை என்பதும் இலங்கையை சகல சமூகங்களையும் அரவணைக்கின்றதும் சமூகங்களுக்கு இடையில் இணக்கப் போக்கைக் கொண்டதுமான நாடாக இலங்கையை கட்டியெழுப்ப முடியாமல் இருப்பதில் உள்ள தோல்வியை பிரதிபலிக்கின்றன.

தற்போதைய அரசாங்கமும் அதற்கு முன்னதாக பதவியில் இருந்த அரசாங்கங்களும் அமை்பதாக உறுதியளித்த உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தேசத்தின் பெதுவான வரலாற்றின் அங்கமாக வருவதற்கு ஏதுவாக அவர்களின் துன்பியல் அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும்.

காயங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் மாத்திரமே இலங்கை உண்மையில் நல்லிணக்கப் போக்குடைய ஒரு தேசமாக மாறமுடியும்.

சகல சமூகங்களுமே போரினால் போதிக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்திருக்கிறது.

தேசிய அபிவிருத்திச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஆரோக்கியமும் உறுதிப்பாடும் கொண்ட தேசமாக இலங்கை வளரவேண்டுமாக இருந்தால் சகல சமூகங்களும் காயங்களையும் குணப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

வெவ்வேறு சமூகங்கள் பரஸ்பர மதிப்புடனும் நம்பிக்கையுடனும் ஒன்றிணைந்து வாழும்போதுதான் இந்த நாட்டின் பலத்தை மெய்மையாக்க முடியும்.

-கலாநிதி ஜெகான் பெரேரா

Related posts

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டங்கள்

பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார் – சஜித்

editor