வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகர் லண்டனில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.
தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ரொபின்சன் ஏற்பாடு செய்த இந்த பேரணியில் ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியில் ஈடுபட்ட சிலர், பொலிஸார் மீது தாக்குதலும் நடத்தினர். கூட்டத்துக்குள் இருந்து பொலிஸார் மீது போத்தல்களை வீசியதில், 26 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அமைதியைச் சீர்குலைத்தல், வன்முறை, தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்
இந்நிலையில், லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது,
“வாக்காளர்களை இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் மற்ற நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள்.
இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி. இதை நிறுத்தவேண்டும்” என்று தெரிவித்தார்.