ருமேனியாவிற்கு தொழில்வாய்ப்புகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து, மஹகரம பிரதேசத்தில் அமைந்துள்ள ரெயின்போ வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனும் நிறுவனம் 500க்கும் மேற்பட்டோர்களிடம் இருந்து ரூ.850000, ரூ.1,850000 என்ற அடிப்படைகளில், மில்லியன் கணக்கான ரூபாய்களை அறவிட்டிருக்கிறது.
ஆனால் இதுவரை இவர்களுக்கு தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை.
இன்று இவர்கள் வீதிக்கு வந்துள்ளனர். தமது வீடுகள், சொத்துக்கள் போன்றவற்றை அடமானம் வைத்து, கடன் வாங்கி பணம் செலுத்தி இன்று பெரும் சிக்கலுக்குள் தள்ளப்படுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மஹரகம ரெயின்போ வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு, ருமேனியாவில் தொழில் பெற்றுத் தருவோம் எனக் கூறி கிட்டத்தட்ட 500 பேரை தவறாக வழிநடத்தியதாக இதில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து, தமது பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் எடுத்துரைத்தனர்.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்து, இதற்கு சட்ட உதவியைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
இதன் பிரகாரம் நுகேகொடை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (21) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்தபடி சட்டத்ரணிகளோடு நீதிமன்றத்திற்கு பிரசன்னமானார்.
இச்சமயம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதார சிக்கல்களால் தொழிலாளர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் போன்ற பல்வேறு தொழில் வல்லுநர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் செய்து தங்கள் குடும்பங்களை மேம்படுத்த விரும்பினாலும், இவர்களின் பணத்தை வைத்து இன்று பெரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகளில் உள்ள சில தரப்பினர் இந்த விவகாரத்தை விசாரிப்பதில் ஆர்வம் காட்டினாலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த விடயத்தை முறையாக விசாரிக்கவில்லை.
பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த நிறுவனத்தை விசாரணை செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவு எடுத்த நடவடிக்கைகள் குறித்து திருப்திப் பட முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
இது குறித்து பாராளுமன்றத்திலும் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்களிலும் கலந்துரையாடி பணம் அல்லது தொழில்களைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்போம்.
இதற்காக பெற்றுத் தர முடியுமான அதிக பட்ச சாத்தியமான பங்களிப்பை சட்ட கட்டமைப்பிற்குள் பெற்றுத் தருவோம்.
இதற்குத் தேவையான தொடர்புடைய சட்ட உதவிகளையும் பெற்றுத் தருவோம். நாட்டின் நீதித்துறை மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் இருப்பதால், இவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்களுக்குத் பதில்களும் தீர்வுகளுமே தேவையாக காணப்படுவதனால், பதில்களையும் தீர்வுகளையும் பெற்றுத் தருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்.
இதற்காக முடிந்தவரை முழுமையாகப் போராடுவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
