அரசியல்உள்நாடு

முஸ்லிம்கள் வாக்களிக்காததால் கோட்டாபய ஜனாஸாக்களை எரித்தார் – உதுமாலெப்பை எம்.பி

கோட்டாபய ஜனாதிபதியாக முஸ்லிம் சமூகம் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதனால் தான் கொரோனாவில் மரணமான எங்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு தீர்மானிததார் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த உண்மையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உதுமா லெப்பை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் பாரியளவில் வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிலவி வருகின்றன.

அந்தவகையில் , 34 வைத்திய அதிகாரிகள், 38 வைத்திய நிபுணர்கள், வைத்திய அத்தியட்சகர் 3, பல் வைத்தியர் 16 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

மேலும் குடியிருப்பு வைத்திய அதிகாரி 3 வெற்றிடங்கள், மருந்து கலவையாளர் 67 வெற்றிடங்கள்.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் 31 வெற்றிடங்கள். மருத்துவ மாது 21 வெற்றிடங்கள் மருத்துவ ஆய்வகத் தொழிநுட்பவியலாளர் 14 வெற்றிடங்கள், சுகாதார சேவை உதவியாளர் (ஜூனியர்)205 வெற்றிடங்கள்.

ஆயுர்வேத வைத்தியசாலை தாதியர் 56 வெற்றிடங்கள், ஆயுர்வேத வைத்தியசாலை ஊழியர் 26 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சுகாதார தொண்டர்களாக 1999ஆம் ஆண்டில் இருந்து பணிபுரிபவர்களுக்கு இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை.

இதுதொடர்பில் கிழக்குமாகாண சுகாதார தொண்டர் சங்கம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.

எனவே கிழக்கு மாகாண சுகாதார தொண்டர்களாக பணிபுரிபவர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நிந்தவூரில் பொதுமக்களால் 4 ஏக்கர் காணி வழங்கப்பட்டு சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டினால் அத்திவாரம் இடப்பட்டு இடைநிறுத்தப்பட்ட நிந்தவூர் மகளிர், சிறுவர் வைத்தியசாலையினை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொள்வதுடன் நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நிந்தவூர் பொதுமக்களால் 2 ஏக்கர் காணி வழங்கப்பட்ட நிலையில் கட்டிடங்கள் கட்டப்படாத நிலையில் உள்ளது.

எனவே, நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கான நிரந்தரக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான நிதிகளை சுகாதார அமைச்சின் சுதேச மருத்துவ பிரிவு ஒதுக்க வேண்டும்.

இதேவேளை, சுகாதார அமைச்சரிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்பாராளுமன்றத்தில் கொரோனாவினால’ மரணம் அடைந்து எரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை கேட்டிருந்தார்.

அதன் பின் நான் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனாவினால் மரணமடைந்து எரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வழங்குமாறு முன்மொழிவினை வைத்தேன்.

இதுவரையும் எனது முன்மொழிவிற்கான பதில் சுகாதார அமைச்சினால் அனுப்பிவைக்கப்படாமல் உள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் வாக்களிக்கவில்லை என்பதனால் தான் கொரோனாவில் மரணமான எங்களின் ஜனாஸாக்களை எரித்தார் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த உண்மையாகும்.

நீதி மறுக்கப்பட்ட எமது சமூகத்தின் இந்த நியாயமான கோரிக்கையினை ஏன் இன்னும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள் என கேட்கிறேன் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்

Related posts

அரசு வைத்தியசாலைகளில் போதுமான மருந்து கையிருப்பில்..

அலி சாஹிர் மௌலானாவுக்கு கால அவகாசம் கொடுத்த ரவூப் ஹக்கீம்

editor

இன்றும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு