அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்து செய்யலாம் – பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் – எஸ்.எம்.மரிக்கார் எம்.பி

முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்துச்செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (3) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச்செய்வதற்காக அரசாங்கம் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ஆனால் நீண்டகாலமாக மக்களின் வரி பணத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் சுகபோகம் அனுபவித்து வருவது நியாயம் இல்லை.

ஆனால் இந்த ஜனாதிபதிகள் நாட்டுக்கு செய்த சேவைகள் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புக்காக அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு இல்லாமலாக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.

அத்துடன் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்களை இரத்துச்செய்யும் இந்த நடவடிக்கையை ஒரு பெஷனாகவே மேற்கொள்கிறது.

அவ்வாறு இல்லாமல் நியாயமான உரிமைகளை வழங்கி, அநியாயமான விடயங்களை நீக்குவதில் பிரச்சினை இல்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டு மக்களின் ஜனாதிபதி, அவருக்கும் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.

நாட்டின் ஜனாதிபதி அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் அறிந்து, அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டி இருப்பதால், அதற்காக அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அவருக்கு மன நிம்மதி தேவைப்படுகிறது. அதேபோன்று பாதுகாப்பாளதொரு சூழல் தேவைப்படுகிறது.

அதற்காக அவருக்கு தேவையான பாதுகாப்பு, உத்தியோகபூர் வாசஸ்தலம் கட்டயம் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், மன அழுத்தத்துடன் பணியாற்றிவந்தால், நாட்டுக்கே நட்டம் ஏற்படும்.

அதனால் பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு போதுமான பாதுகாப்பு, அவருக்கு சிறந்த உத்தியோகபூர்வ இல்லம் ஒன்று கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அவர் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.தற்போதுள்ள நிலைமையில் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டி ஏற்படும்.

அதனால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், அதற்கு தேவையான ஆளணி அவ்வாறான வசதிகள் தேவையில்லை. அமெரிக்காவிலும் வழங்குவதில்லை. என்றாலும் அவர்கள் நாட்டுக்கு செய்த சேவை காரணமாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

அதேநேரம் முதுமை நிலையில் இருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்திலே மருந்து பொருட்களை வாங்கிக்கொள்கின்றனர்.

அதனால் இதுதொடர்பாக ஆராய்ந்து பார்த்து, சரியான முறைமையில் இதனை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

-எம்.ஆர்.எம்.வசீம்

வீடியோ

Related posts

ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வேண்டாம்…

முகக்கவசம் இன்றேல் PCR பரிசோதனை

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு