நாடு முழுவதும் மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஆண்டு தோறும் 100 முதல் 120 பேர் வரை மின்சாரம் தாக்கி உயிரிழப்பதாக ஆணைக்குழுவின் ஊடக பேச்சாளர், பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.
இந்த இறப்புகளுக்கு முக்கிய காரணம் ட்ரிப் சுவிட்சுகள் (மின் தடைக்காப்பி) ‘இல்லாமை அல்லது செயலிழப்பதே காரணமென விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதற்கு முக்கிய காரணம் விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் பயிர் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் அங்கீகரிக்கப்படாத வெளிப்புற மின் கம்பிகள் என்றும் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட பொது ஆலோசனையைத் தொடர்ந்து மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க உதவும் வகையில் பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் ஊடக பேச்சாளர் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் மேலும் தெரிவித்தார்.