வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரும்,
இலங்கை கல்வி நிருவாக சேவையின் மூத்த அதிகாரியுமான மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.ஏ.சி. காதர் முகைதீன் சேர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26/12/2025) அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் நடைபெற்றது.
கடந்த 20.12.2025 (சனிக்கிழமை) அன்று 88 வயதில் வபாத்தான மர்ஹூம் காதர் முகைதீன் சேர் அவர்கள், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் அதிபராக கடமையாற்றியதுடன், பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைத்த முக்கிய கல்வி நிருவாகியாவார்.
அன்னாரின் கல்விச் சேவையை நினைவுகூரும் வகையில், இந்நிகழ்வு பாடசாலை நிருவாகம் மற்றும் SDEC (School Development Executive Committee) இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வில், மர்ஹூம் காதர் முகைதீன் சேர் அவர்களின் குடும்பத்தினரும் அழைக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
பாடசாலை அதிபர் உரையாற்றும் போது, மர்ஹூம் காதர் முகைதீன் சேர் அவர்கள் கல்விக்காக செய்த அர்ப்பணிப்பான சேவைகள், பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பாடசாலை SDEC செயலாளர் உரையாற்றுகையில், “ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை அவர் செய்து விட்டுச் சென்ற பணிகளே பேசும். இன்று ஒரு சேவையாளருக்காக நாம் அனைவரும் ஒன்றுகூடி இறைவனிடம் பிரார்த்திக்கும் நிலைமை அவர் இந்த சமூகத்திற்கு எவ்வளவு அரிய சேவையை செய்தார் என்பதற்கான சாட்சி” எனக் குறிப்பிட்டார்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், SDEC உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வு, மர்ஹூம் காதர் முகைதீன் சேர் அவர்களின் கல்வி வரலாற்றுச் சேவைகளை நினைவுகூரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் காதர் முகைதீன் சேர் அவர்களுக்கு உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவானாக. ஆமீன்.
