உலகம்

மனைவி இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை

ஒடிசா மாநிலம், பரலாகேமுண்டி மாவட்டத்தில் மனைவியின் மரணத்தால் மனமுடைந்த 40 வயது நபர் ஒருவர், தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த பிரியாணி கொடுத்து, தானும் அதனை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பரலாகேமுண்டி நகரில் உள்ள ஒடியா பரலா வீதியைச் சேர்ந்த இவரது மனைவி, கடந்த மார்ச் 21 அன்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர், தனது 7 மற்றும் 11 வயது குழந்தைகளை பராமரிக்க முடியாமல் மேலும் மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை மதியம், தற்கொலை செய்யும் நோக்கில், தனது குழந்தைகளுக்கு விஷம் கலந்த பிரியாணியை வழங்கிவிட்டு, தானும் அதனை உட்கொண்டார்.

மயக்க நிலையில் கிடந்த மூவரையும் பார்த்த அயலவர்கள், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொலிஸார் மூவரையும் மீட்டு, பரலாகேமுண்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு 7 வயது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தந்தையும், 11 வயது மகளும், மேல் சிகிச்சைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இருப்பினும், வியாழக்கிழமை காலை இருவரும் உயிரிழந்தனர்.

இவர்கள் உட்கொண்ட பிரியாணி மாதிரி, தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக, பரலாகேமுண்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாந்த் பூபதி தெரிவித்தார்.

மனைவியின் மரணத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்துடன், சமீபத்தில் தொழிலில் நஷ்டமடைந்ததும் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவத்தின் முழு பின்னணியை அறிய, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

ட்ரம்ப் இற்கான வாக்குப் பிச்சையில் பின்லேடனனின் மருமகள்

கால்நடைகளிடையே லம்பி வைரஸ்

‘Vogue’ இதழ் அட்டைப் படங்களால் சர்ச்சையில் உக்ரைன் ஜனாதிபதி