மருந்தகங்களில் தகுதிவாய்ந்த மருந்தாளுநர்களால் மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
அரச வைத்தியசாலைகளிலும் மருந்தாளுநர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், இலங்கையில் உள்ள 5,000 மருந்தகங்களில் பெரும்பாலானவற்றில் மருந்தாளுநர்கள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, மருந்தகங்களை மூடுவது அல்லது மருந்து வழங்கலை தன்னிச்சையாக முன்னெடுப்பது பொருத்தமான பதிலாக அமையாது எனவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வீதி போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கோரினார்.
மாறாக, காலக்கெடுவுடன் கூடிய திட்டமொன்றை உருவாக்கி, தகுதிவாய்ந்த மருந்தாளுநர்களை நியமிக்கும் வரை முறையான செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
Citizen Desk வேலைத்திட்டத்தின் கீழ், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பில் (18) இவ்வாறு தெரிவித்த அவர், உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு இடைநிலைப் பயிற்சி வழங்கி, மேற்பார்வையுடன் பணியமர்த்துவது போன்ற இடைநிலைத் தீர்வுகளை முன்மொழிந்தார்.
மேலும், இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் வேலைத்திட்டமொன்றை சமர்ப்பிப்பதாகவும், மருந்துகளை ஒழுங்கற்ற முறையில் வழங்குவது தவறு எனவும் அவர் வலியுறுத்தினார்.