இன்று யாரும் பேசாத விடயமாக காணப்படும், கடுமையான பிரச்சினையான அமைந்து காணப்படும் வறுமை நாட்டில் மேலும் அதிகரித்து காணப்படுகின்றன.
Center for poverty analysis எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, நாட்டின் 25% ஆனோர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் வேறு பல நிறுவனங்கள் நடத்திய கணக்கெடுப்புகள் நாட்டில் தற்போது வறுமை நிலையானது 40-50% க்கு இடையில் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன.
நாட்டில் ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை யாதென்பதை தற்போதைய அரசாங்கத்திற்கோ அல்லது முந்தைய அரசாங்கத்திற்கோ சரியாகத் தெரியாது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூட இன்னும் இதை துல்லியமாகக் கணக்கிடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பவற்றின் மற்றுமொரு கட்டம் காலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு, அம்லங்கொடை தேர்தல் தொகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் பங்கேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
வீட்டு அலகின் வருமான மற்றும் செலவின கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்த வேளையே, இதை செய்திருக்க வேண்டும்.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களமானது, ஒரு வீட்டின் உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகளைக் கணக்கிட்டு வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்து, வறுமைக் கோட்டில் இருப்பவர்கள் மற்றும் அதற்குக் கீழே இருப்பவர்களை ஏழ்மையடைந்தோர் என அடையாளப்படுத்துகிறது.
இதைக் கணக்கெடுக்காது, அஸ்வெசும வழங்கப்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 திசைகாட்டி உறுப்பினர்களை திருப்திப்படுத்தவே வறுமையை ஒழிக்கப்பதாக கூறிக் கொண்டு பிரஜா சக்தி வேலைத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
கிராமப்புற, நகர்ப்புற மற்றும் தோட்டப்புற வறுமையை சரியாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அஸ்வெசும வழங்கப்பட்டது. தற்போதும் வழங்கப்பட்டு வருகின்றன.
பலர் அஸ்வெசும கோரி விண்ணப்பித்த போதிலும், அவர்களில் உண்மையான வறியோரைக் கண்டறிய எந்த விஞ்ஞானபூர்வ அளவுகோல்களும் இல்லை.
இது இவ்வாறு இருக்கத்தக்க, இப்போது பிரஜா சக்தி என்ற புதிய பெயரில், திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரஜா சக்தி வேலைத்திட்டத்தில் ஜே.வி.பி.யின் ஆதரவாளர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழைப் பெறுவதற்கும் இந்தத் தலைவர்களின் பரிந்துரை தேவையாம்.
தமது கட்சிக் கட்டமைப்பை கிராமிய மட்டத்தில் பலப்படுத்திக் கொள்வதற்கே பிரஜா சக்தி வேலைத்திட்டம் ஊடாக இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
ஊடகங்கள் மூலம் உருவாக்கப்பட்ட போலி பிம்பங்களால் இன்று மக்களே இறுதியில் ஏமாந்தும் உதவியற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.
மறுபுறம் உழைக்கும் வர்க்கத்தை காக்க வந்த ஜே.வி.பி தலைவர்கள் இன்று வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
