பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள அந்த கடிதத்தில் தேரர் தெரிவித்துள்ளதாவது,
பிரதமரின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தன்னிச்சையான கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், நாடும், மக்களும், புத்த சாசனமும் கடுமையான அபாயகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளன என்பது உறுதியாகிறது.
இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் நேரடி பாதிப்புகள் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்விச் சீர்திருத்தங்களுக்காக பிக்குகள், ஏனைய மதத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிபுணர்களிடம் கருத்துகள் பெறப்படவில்லை.
இதனால் இந்தச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த நடைமுறை ஆரம்பத்திலிருந்தே தவறானது என்றும், எனவே அதற்கு எவ்வித செல்லுபடியும் இல்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பிக்கு என்ற ரீதியில் தனது வரலாற்று ரீதியான கடமையை நிறைவேற்றும் பொருட்டு, இந்த ஆபத்திலிருந்து நாடும் மக்களும் புத்த சாசனமும் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய, நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாக எல்லே குணவங்ச தேரர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
