உள்நாடுபிராந்தியம்

பாலம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தம் – கோபம் அடைந்த மக்கள்

அக்கரைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து புதிய துறைமுகத்துக்கு செல்லும் பிரதானயில் சிராஜியா நகர் மற்றும் தக்வா நகர் வீதியை பிரித்து குறுக்காக ஓடும் ஒரு ஆறு காணப்படுகிறது.

இந்த ஆற்றுப்பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த வீதி அண்மையில் பகுதியளவில் சேதமடைந்த நிலையில் இருந்தது.

இதனைச் சீரமைத்து புதிய பாலம் ஒன்றை அமைக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்டமாக, தற்போது உள்ள வீதியின் இருபுறங்களிலும் ஆழமான குழி அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், இந்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், பாலத்திற்கான எந்தவொரு கட்டுமானப் பணிகளும் இதுவரை தொடங்கப்படவில்லை.

இதனால், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக, இப்பகுதி பெரும்பாலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதிகமாகப் பயணிக்கும் பிரதான பாதையாகும்.

எனவே, அவர்கள் தினசரி துறைமுகத்துக்குச் செல்வதற்காக இவ்வீதியினூடாகவே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அகழ்வு செய்யப்பட்ட பகுதி ஆழமானதாலும், மழைநேரங்களில் அதில் நீர் தேங்குதல் மற்றும் சரிவுகள் ஏற்படுவதாலும், பயணிகள் உயிர் ஆபத்திற்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் இந்த இடத்தில் இரண்டு சிறுமிகள் விபத்துக்குள்ளாகியுள்ளனர். மேலதிக வகுப்பிற்கு சென்று வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த தரம் நான்கில் கல்வி கற்கும் எம். எம். சிம்ரா மற்றும் தரம் இரண்டில் கல்வி கற்கும் அவரது சகோதரி எம். எப். அனாணி ஆகியோர் அகழ்வு செய்யப்பட்ட அந்தப் பள்ளப் பகுதியில் விழுந்தனர்.

இச்சம்பவத்தினை அவதானித்த மக்கள் அவர்களை மீட்டு மூதூர் தள வைத்தியசாலைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி வழங்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்தச் சம்பவம் மக்களிடையே பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் சார்பில், “அகழ்வு செய்யப்பட்ட பகுதியை வேலியிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமையாலும், பாலம் கட்டும் பணிகள் தாமதமாகியதாலும் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகின்றன” எனக் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட சாலை மேம்பாட்டு அதிகாரிகளும் பிரதேச சபையும் உடனடியாக இவ்விடத்தை பார்வையிட்டு, பாலம் கட்டும் பணிகளை விரைவாக ஆரம்பித்து, தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

பெரும்பான்மையான மக்களுக்கு நிதி தொடர்பான கல்வியறிவு இல்லை – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க

editor

மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

editor

ரஷ்ய விமான நிறுவனம் இலங்கைக்கான வர்த்தக விமானங்களை இடைநிறுத்தியுள்ளது