பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய சமிந்த குலரத்னவின் பணி இடைநீக்கம் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (27) கருத்துத் தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்பில் தனிநபர் விசாரணைக்குழு ஒன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவருக்காக எதிர்க்கட்சியின் முதன்மை அமைப்பாளர் அந்த தீர்மானத்தை எடுத்த குழுவில் பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, கடந்த ஆண்டின் (2025) ஆகஸ்ட் 19ஆம் திகதி இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், பொது நிர்வாக அமைச்சின் அதிகாரியொருவரின் தலைமையில் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அந்தத் தனிநபர் குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த குழு இரண்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தவறான தகவல்களை முன்வைத்து பாராளுமன்ற பணிக்குழாம் பிரதானி மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நியமனத்தைப் பெற்றுக்கொண்டமை, அந்தப் பதவிகளில் சேவையை நிரந்தரமாக்கிக் கொண்டமை, தனக்கு உரிமையில்லாத சம்பளப் பலன்களைப் பெற்றுக்கொண்டமை ஆகியவற்றின் ஊடாக பொதுச் சேவை விதிமுறைகளுக்கு முரணாகச் செயற்பட்டு முறையற்ற அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டமை மற்றும் நிதி இழப்பை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தனிநபர் விசாரணைக்குழுவை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அங்கு எதிர்க்கட்சித் தலைவருக்காக எதிர்க்கட்சியின் முதன்மை அமைப்பாளர் இருந்தார்.
அவர் அங்கம் வகித்த குழுவிலேயே இந்த பிரதி செயலாளர் நாயகம் குறித்து விசாரணை செய்ய தனிநபர் விசாரணைக்குழுவிற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்படி 2025 ஆகஸ்ட் 19ஆம் திகதி இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது.
பொது நிர்வாக அமைச்சில் இதற்காகத் தெரிவு செய்யக்கூடிய விசாரணை அதிகாரிகள் உள்ளனர், அவர்களில் ஒருவரே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2026 ஜனவரி 23ஆம் திகதி அந்த ஆரம்ப விசாரணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றக் குழுவிற்கு கிடைத்தது.
தனிநபர் விசாரணைக்குழுவை நியமிக்கும் போது, அதற்கொரு விடயப்பரப்பு வழங்கப்பட்டது.
பாராளுமன்ற பணிக்குழாம் பிரதானி மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் பதவிக்கான தெரிவு, அவரது தகைமைகள் மற்றும் அவரை அந்தப் பதவியில் நிரந்தரமாக்குதல் போன்ற விடயங்களைக் கண்டறிவதே அந்த விடயப்பரப்பாக இருந்தது.
அந்த விசாரணைக்குழு இரண்டு பரிந்துரைகளை முன்வைத்தது.
தவறான தகவல்களை முன்வைத்து பாராளுமன்ற பணிக்குழாம் பிரதானி மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நியமனத்தைப் பெற்றுக்கொண்டமை மற்றும் அந்தப் பதவியில் சேவையை நிரந்தரமாக்கிக் கொண்டமை, தனக்கு உரிமையில்லாத சம்பள உரிமையைப் பெற்றுக்கொண்டமை ஊடாக பொதுச் சேவை விதிமுறைகளுக்கு முரணாகச் செயற்பட்டு முறையற்ற அனுகூலங்களைப் பெற்றமை மற்றும் நிதி இழப்பை ஏற்படுத்தியமை தொடர்பில் ஜி.கே.ஏ.சி.கே. குலரத்னவை பணி இடைநீக்கம் செய்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல்.
அத்துடன், குலரத்னவின் நியமனம் மற்றும் சேவை நிரந்தரமாக்கல் தொடர்பில் சில அதிகாரிகள் செயற்பட்ட விதம் 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ‘ஊழல்’ என்ற குற்றத்திற்குள் வருவதால், அது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த விடயங்களை இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தல்.
இந்த இரண்டு விடயங்களே தனிநபர் குழுவின் பரிந்துரைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி முதலாவது பரிந்துரையின் கீழ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி பணி இடைநீக்கம் செய்யும் போது எதிர்க்கட்சியும் பிரதிநிதித்துவப்படுத்தியது. இந்த விசாரணை அறிக்கைக்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாட முடியும்” என்றார்.
பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சிரேஷ்ட சட்டத்தரணி பி.கே.ஏ. சமிந்த குமார குலரத்ன கடந்த 23ஆம் திகதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அவரது நியமனம் தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி முதல் அவர் இந்தப் பதவியில் கடமையாற்றி வந்தார்.
சமிந்த குலரத்ன திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டமாணி பட்டதாரியாவார். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பக்கிங்ஹாம்ஷயர் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவம் தொடர்பான முதுகலை டிப்ளோமாக்களையும் பெற்றுள்ளார்.
அவர் 2005ஆம் ஆண்டு முதல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும், 2016ஆம் ஆண்டு முதல் அதன் சபையின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த குலரத்ன தனது 20 வருடங்களுக்கும் மேலான தொழில் வாழ்க்கையில், பாராளுமன்ற ஆளும் கட்சி முதன்மை அமைப்பாளரின் செயலாளர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், பிரதமரின் மேலதிக செயலாளர், எதிர்க்கட்சித் தலைவரின் மேலதிக செயலாளர், லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அமைச்சக ஆலோசகர், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி உதவிச் செயலாளர் உள்ளிட்ட பல நிறைவேற்று மட்டத்திலான அரச நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார்.
