இளைஞர்கள் போராட்டத்தில் 75 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி உள்ளிட்ட 05 பேரின் கடவுச்சீட்டை முடக்க இடைக்கால அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நேபாளத்தில் கடந்த 08ஆம், 09ஆம் திகதிகளில் இளைய தலைமுறையினர் நடத்திய போராட்டத்தைப் பொலிஸார் ஒடுக்கியதில் 75 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை விட்டு விலகினார்.
இதையடுத்து, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுஷிலா கார்கி தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் அதிகார அத்துமீறல் குறித்து விசாரிக்க கடந்த 21ஆம் திகதி நீதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைத்தது.
இந்த ஆணைக்குழு தனது விசாரணையைத் தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில், அளித்த பரிந்துரையின் பேரில், முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக், முன்னாள் உள்துறை செயலாளர் கோகர்ண மணி துவடி, தேசிய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் ஹுதராஜ் தாபா மற்றும் காத்மாண்டு முன்னாள் மாவட்ட அதிகாரி சபி ரிஜால் ஆகிய ஐந்து பேரின் கடவுச்சீட்டை இடைக்கால அரசு முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான உத்தரவு நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால், அவர்கள் அனைவரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு விசாரணை முடியும் வரை அவர்கள் காத்மாண்டு பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டுமென்றாலும் இடைக்கால அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
-இந்தியா டுடே