2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாலை சுமார் 3.30 மணி அளவில், நீலாப்பொல பிரதான வீதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களில் ஒருவரை நேற்று முன்தினம் (31) உடனடியாக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளார்.
மற்றைய இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர்களின் பிரேதங்கள் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி காலை 10.00 மணி அளவில், போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரின் மூலம் திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டி கடிதம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திடீர்
மரண விசாரணை அதிகாரி மூதூர் நீதவான் நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதி அவர்களிடம், உரிய மரண விசாரணை நடத்துவதற்கான கட்டளை வழங்குமாறு விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கமைவாக, காலை 11.00 மணி அளவில் கௌரவ நீதிபதியின் முழுமையான கட்டளையின் பிரகாரம், திடீர் மரண விசாரணை அதிகாரி தனது கடமையை பொறுப்பேற்று விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.
அதன்படி, இன்று காலை 11.00 மணி அளவில், உயிரிழந்த நபரின் மரணத்திற்கான காரணங்களை உறுதிப்படுத்தும் சட்ட மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக, பிரேதம் திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
