அரசியல்உள்நாடு

நினைவுக்கல்லைத் திறந்து வைக்க மறுத்த அமைச்சர் சுனில் குமார கமகே அங்கிருந்து வெளியேறினார்

நீண்ட காலமாகப் பராமரிப்பின்றி கைவிடப்பட்டிருந்த யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தின் புனரமைப்புப் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த குழப்ப நிலை காரணமாக, புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லைத் திறந்து வைக்க மறுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கிருந்து வெளியேறினார்.

யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தைப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று (23) கல்லூரிக்கு விஜயம் செய்திருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், 2012ஆம் ஆண்டு யாழ். மத்திய கல்லூரியில் ஆழம் கூடிய ‘டைவிங்’ (Diving) நீச்சல் தடாகம் ஒன்று அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.

எனினும், சில வருடங்களிலேயே குறித்த நீச்சல் தடாகம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் அதனை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

நேற்றைய தினம் கல்லூரிக்கு விஜயம் செய்து நீச்சல் தடாகத்தைப் பார்வையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர், “டைவிங் நீச்சல் தடாகம் என்றால் குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே அதனைப் பயன்படுத்துவார்கள்.

அதேநேரம், இதனைச் சாதாரணமான ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக மாற்றினால், பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.

பொது நிதியில் புனரமைக்கப்படும்போது அது அதிகளவானோருக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டும்” என்ற யோசனையை முன்வைத்திருந்தார்.

அமைச்சரின் இந்த முயற்சிக்கு யாழ். மத்திய கல்லூரி மட்டத்தில் ஆதரவும் எதிர்ப்பும் என இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டன.

இந்நிலையில், இன்று கல்லூரிக்குச் சென்ற அமைச்சர் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இதன்போது, ஒரு தரப்பினர் தடாகத்தை முன்பு இருந்தவாறே (டைவிங் தடாகமாக) புனரமைத்துத் தருமாறு கோரினர்.

மற்றொரு தரப்பினர், அமைச்சரின் கருத்தை ஏற்று சாதாரண நீச்சல் தடாகமாக மாற்றினாலும் பரவாயில்லை எனத் தெரிவித்தனர். இதனால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

புனரமைப்புப் பணிகளுக்கான நினைவுக்கல் திரைநீக்கம் செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

எனினும், பாடசாலை மட்டத்தில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டிய பின்னரே அதற்கேற்றவாறு புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்க முடியும் எனக் கூறிய அமைச்சர், நினைவுக்கல்லைத் திரைநீக்கம் செய்யாமலே அங்கிருந்து வெளியேறினார்.

பாடசாலை அதிபர் உள்ளிட்ட சிலர் நினைவுக்கல்லைத் திறந்து வைக்குமாறு வலியுறுத்திய போதிலும், அமைச்சர் அதனை மறுத்துவிட்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், யாழ். மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

-பிரதீபன்

Related posts

இந்தியாவில் கைதான ஐஎஸ் நபர்கள்: இலங்கை நண்பர் ஒருவரும் கைது

குடும்ப நல உத்தியோகத்தர்கள் பணிபுறக்கணிப்பு

குழந்தைகள் மத்தியில் உயிராபத்துமிக்க ‘மிஸ்ஸி’