எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது.
ஆடைத்துறையில் 60% ஏற்றுமதி தலமாகவும் அமெரிக்கா நாடே இருந்து வருகிறது. தீர்வை வரியை 44% இலிருந்து 30% ஆகக் குறைந்தமை நல்லதொரு விடயமாகும்.
என்றாலும், எங்களுடன் ஏற்றுமதி போட்டியாளர்களாக இருந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் பெற்ற வரிச் சலுகை நியாயமானது தானா என்பது குறித்தும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜப்பான் 25%, மால்டோவா 25%, புரூணை 25%, தென் கொரியா மற்றும் கஸகஸ்தான் 25%, இந்தியா 26% என்ற வகையில் இந்நாடுகள் தமது தீர்வை வரிகளைக் குறைத்துக் கொண்டுள்ளன. நாம் இந்தியா வங்காளதேசம் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அடுத்த 3 வாரங்களுக்குள் நாம் ஆழமான இராஜதந்திர தலையீட்டை மேற்கொண்டே ஆக வேண்டும். நாம் வெள்ளை மாளிகையுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, இந்த வரிச் சலுகைகளை இன்னும் குறைந்த மட்டத்தில் பெற வேண்டும்.
நாட்டிற்கு சிறந்த இணக்கப்பாட்டை பெறுவதற்கு, கட்சி பேதமின்றி ஐக்கிய மக்கள் சக்தி தமது ஒத்துழைப்பைப் பெற்றுத் தரும்.
இந்த வரிகளால் நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகளை இல்லாமலாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.