இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சர் வழங்கிய இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறினால், நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், நாட்டின் சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கான குறுகிய கால அல்லது நீண்ட காலக் கொள்கைகள் எவையும் உள்ளடக்கப்படவில்லை என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் சுகாதாரத் துறையினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சரால் வழங்கப்பட்ட எழுத்துமூல இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அந்தப் போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (13) நடைபெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, வழங்கப்பட்ட இணக்கப்பாடுகளை நிறைவேற்றி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சருக்கும் சுகாதார அமைச்சுக்கும் மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறினால், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க நிறைவேற்றுக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
