அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் என்னைக் கொலை செய்யப்போவதாக மிரட்டினார் – சந்துலா பியதிகம

வெலிகம பிரதேச சபையை அமைக்க ஆதரவு அளித்தால் என்னைக் கொலை செய்யப்போவதாக வெலிகம தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுசந்த் டயஸ் தஹநாயக தன்னை மிரட்டியதாக வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சந்துலா பியதிகம தெரிவித்தார்.

இது குறித்து திங்கட்கிழமை (21) பொதுஜனபெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சந்துலா பியதிகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் சட்டத்தரணி துஷாரி சூரிய ஆராச்சி மற்றும் சமூக ஆர்வலர் சுபாஷினி புலேகொட ஆகியோரும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சந்துலா பியதிகம மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 10ஆம் திகதி எனது வீட்டிற்கு முன்பாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுசந்த் டயஸ் தஹநாயக ஒரு வெள்ளை காரில் வந்து நின்று 24 ஆம் திகதி நடைபெறும் சபை அமர்வில் கலந்து கொள்வீர்களா? என்று கேட்டார்.

அதற்கு நான் ஆமாம் என்று கூறினேன். சபை அமர்வில் கலந்து கொண்டால் கொன்று விடுவேன் என கூறி மிரட்டினார். பின்னர் நான் பொலிஸாரிடத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்தேன் என்றார்.

இது குறித்து சட்டதரணி துஷாரி சூரியஆராச்சி தெரிவிக்கையில்,

இலங்கையில் பெண்களுக்கு அரசியலில் பங்கேற்கும் உரிமை உண்டு. அவர்கள் அமைதியாகவும் மதிப்புடனும் அரசியல் செய்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசு எதிர்பார்த்த அளவில் ஆட்சியில் வெற்றி பெறவில்லை.

2018 ஆம் ஆண்டு பொதுஜன முன்னணி கட்சியை கைப்பற்றினால் அவர்கள் பெரும் அதிகாரத்தை பெறுவார்கள் என நம்பினர். ஆனால் உண்மையில் அவர்கள் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி செய்து சபைகளை அமைக்க மட்டுமே முடிந்தது.

வெலிகம பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசுக்கு நான் கூறிக்கொள்கிறேன், பொதுஜன முன்னணியின் பெண்களுக்கு எதிரான மனோபாவத்தை விட்டுவிடுங்கள் . எவரது மிரட்டல்களுக்கும் நாங்கள் பயப்படமாட்டோம் என்றார்.

மேலும், சமூக ஆர்வலர் சுபாஷினி புலேகொட கருத்து தெரிவிக்கையில்,

பெண்களுக்கு சம உரிமை வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசு வாக்குறுதிகள் கொடுத்தும் செயல்களில் தோல்வியடைந்துள்ளது.

வெலிகம பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. இப்போது தேசிய மக்கள் சக்தியானாலும், பழைய தவறுகளை மறக்க முடியாது. அவர்கள் அனைவரும் இப்போது வரலாற்றை அழிக்க முயற்சிக்கிறார்கள்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த நாட்டின் மக்கள் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கம் சொன்னபடி பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆனால் இன்று பாதுகாப்பை காணவில்லை.

நாட்டில் மக்கள் மீண்டும் மீண்டும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இன்று இந்த நாட்டில் மனிதநேயமும் இரக்கமும் எங்கே? எனவே, இந்த நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Related posts

“மனித குலத்தை போற்றும் ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த ஈதுல் அல்ஹா பெருநாளைக் கருதலாம்” ஹஜ் வாழ்த்தில் சஜித் பிரேமதாஸா

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

தேயிலை தோட்டத்தில் 17 வயது யுவதியின் சடலம்: சகோதரரின் கனவர் தப்பியோட்டம்