உள்நாடு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து காணாமல் போன மஞ்சள் அனகொண்டா கண்டிபிடிப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட ‘மஞ்சள் அனகொண்டா’ குட்டி, ஊர்வன பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஊர்வன பூங்காவின் பராமரிப்பாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னரே இந்தக் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக நாட்டிற்குக் கடத்தி வரப்பட்ட மஞ்சள் அனகொண்டா உட்பட 4 வகையான 6 பாம்புகளைக் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர்.

இவை கடந்த 2025.09.15 அன்று பராமரிப்பிற்காகத் தெஹிவளை மிருகக்காட்சிசாலையிடம் ஒப்படைக்கப்பட்டன.

சுமார் ஒரு வயதுடையதும், ஒன்றரை முதல் இரண்டு அடி நீளமானதுமான இந்த அனகொண்டா குட்டி, ஊர்வன பூங்காவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதே காணாமல் போனது.

மிருகக்காட்சிசாலையிடம் இருந்த இலங்கையின் ஒரேயொரு மஞ்சள் அனகொண்டா இதுவாகும்.

இது குறித்து கடந்த 7 ஆம் திகதி தெஹிவளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

தவறுதலாகப் பெட்டியின் கதவை மூடாமல் விட்டதால் குட்டி வெளியே சென்றிருக்கலாம் எனப் பராமரிப்பு ஊழியர் தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக ஊழியர்களை ஈடுபடுத்தி மிருகக்காட்சிசாலை முழுவதும் தேடுதல் நடத்திய போதிலும், அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், பராமரிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளை அடுத்து, நேற்று (16) அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

இத்தகைய பின்னணியிலேயே, ஊர்வன பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிற்குள் மறைந்திருந்த நிலையில் அனகொண்டா குட்டி இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை – இஸ்ரேல் இடையில் உடன்படிக்கை – பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு.

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி

editor

அம்பர் எச்சரிக்கை குறித்து வெளியான தகவல்

editor