கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரி மாளிகைக்கு முன்பாக நவம்பர் 1, 2019 அன்று ஓய்வுபெற்ற மேஜர் மற்றும் வழக்கறிஞர் அஜித் பிரசன்னாவைத் தாக்கிய வழக்கில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவை விடுவித்து கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் முதல் சந்தேக நபர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும ஆவார், ஹேஷா விதானகே இரண்டாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இரண்டு முறை அழைப்பாணை அனுப்பப்பட்ட போதிலும் முறைப்பாட்டாளர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதை நீதவான் கவனித்தார்.
அதன்படி, ஹேஷா விதானகேவை வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதல் சந்தேக நபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும உயிரிழந்துள்ள நிலையில், இரண்டாவது சந்தேக நபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது திறந்த நீதிமன்றத்தில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.