யாழ். பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் சந்திரசேகர், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் சகிதம் கற்கோவளம் பகுதிக்கு நேற்று (17) சென்றிருந்தார்.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலால் மீன்வாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், மீனவர்கள் மீதான வாள்வெட்டு தாக்குதல் பற்றியும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இது பற்றி ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக அதிகாரிகள் சகிதம் அமைச்சர் அங்கு விரைந்திருந்தார்.
மீனவர்கள் மற்றும் மக்களிடம் கலந்துரையாடி, நடந்தவற்றை கேட்டறிந்து – அவை பற்றி பொலிஸாரிடம் எடுத்துரைத்தார்.
பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகள் ஊடாகவே மக்களுக்கு அமைச்சர் தெளிவுபடுத்த வைத்தார்.
அத்துடன், சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றுக்கு நிச்சயம் முடிவு கட்டப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
தீவக பகுதிகளில் காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது. இனி சட்டத்தின் ஆட்சிதான் நடக்கும் என்பதை வன்முறை கும்பல்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சட்டத்தின் பிடிக்குள் இருந்து தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது எனவும் அமைச்சர் மக்களிடம் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் சுகநலம் விசாரித்த அமைச்சர், மீன்வர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் இடித்துரைத்தார்.
