உள்நாடு

தபால் சேவைகள் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – நாட்டின் பல்வேறு தபால் நிலையங்களினால் முன்னெடுக்கப்படும் சேவைகள் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக, பொதுமக்கள் மற்றும் தபால் ஊழியர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல் மாகாணம், காலி பிரதான தபால் அலுவலகம் மற்றும் அதன் உப தபாலகங்கள், குருணாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய மற்றும் அதனை அண்டிய தபால் அலுவலகங்கள் அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தபால் அலுவலகம் மற்றும் உப தபால் அலுவலகங்கள் ஆகியவற்றின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு சேவைகளை இடைநிறுத்தல் அல்லது தபால் அலுவலகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிராந்திய தபால் அலுவலக நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தபால் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதங்கள் நாட்டின் ஏனைய தபாலகங்களில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய தபால் பரிமாற்று நிலையம் மற்றும் தபால் திணைக்கள தலைமையகம் ஆகியவற்றின் வாடிக்கையாளர் சேவைகளை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தபால் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும், தபால் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

Related posts

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு – களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு.

editor

அநுர‌குமார‌ திருட‌ர்க‌ளை இணைக்காம‌ல் வெற்றி பெற‌ முடியாது – உல‌மா க‌ட்சி

editor

ரயில் தடம்புரள்வு – வடக்கு புகையிரத சேவை பாதிப்பு