தந்தையின் அரவணைப்பில் இருந்த குழந்தை, தந்தைக்குத் தூக்கம் ஏற்பட்டதால் அவரது கைகளிலிருந்து தவறி விழுந்து, தலை சீமெந்து தரையில் மோதியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று அளுபோமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
படதொப துடுவ பிரதேசத்தை சேர்ந்த ருசேலி கெயாஷா என்ற இரண்டரை மாத குழந்தை இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை அளுபோமுல்ல பொலிஸாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்ததுடன், தலையின் வலது பக்கம் ஏற்பட்ட காயம் காரணமாக மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு இரத்தம் உறைந்தமையே மரணத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
அதற்கமைய, மரண விசாரணை அதிகாரி இந்த மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, குழந்தையின் தாய் மற்றும் தந்தையை அழைத்து இது குறித்து விசாரித்துள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில், மரணம் தொடர்பில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும், குழந்தைக்கு எவ்வித விபத்தும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த குழந்தையின் தந்தை பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
கடந்த 06 ஆம் திகதி தான் இரவு நேர கடமையை முடித்துவிட்டு 07 ஆம் திகதி காலை 06.15 மணியளவில் வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது மகள் அறையில் கட்டிலில் தனியாக இருந்ததைக் கண்டு, குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்று, பின்னர் வீட்டின் முன்புறம் உள்ள நாற்காலியில் அமர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் குழந்தை அழத் தொடங்கியதால், தான் நாற்காலியில் இருந்து எழுந்து மகளை கையில் எடுத்துக்கொண்டு நடந்தவாறு தாலாட்டியதாகவும், அப்போது தனக்குத் தெரியாமலே தூக்கம் ஏற்பட்டதால் மகள் தனது கையிலிருந்து நழுவி கீழே விழுந்ததாகவும், மகளின் அழுகைச் சத்தம் கேட்டே தான் சட்டென விழித்ததாகவும் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் அயலவர் ஒருவரை அழைத்து குழந்தையை சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அன்றைய தினமே குழந்தை கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அதிலிருந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் குழந்தை உயிரிழந்ததாகவும், தனக்கு ஏற்பட்ட பயம் காரணமாக வீட்டில் நடந்த விபத்து பற்றி யாருக்கும் சொல்லவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
