உலகம்

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், இன்று (14) பிற்பகல் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் மாயமாகியுள்ளதால், தற்போது மீட்புப் பணியில் இராணுவம் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சஷோதி கிராமத்தில் இன்று பிற்பகல் ஒரு பெரிய மேக வெடிப்பு காரணமாக, திடீர் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 2 மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை(CISF) வீரர்கள் உட்பட, குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளில் தற்போது ராணுவமும் இணைந்துள்ளது. மேலும், அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கிஷ்த்வாரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் தகவலின்படி, 38 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மச்சைல் மாதா யாத்திரைக்கான தொடக்கப் புள்ளியாக சஷோதி உள்ளது. அதேபோல், கிஷ்த்வாரில் உள்ள மாதா சண்டியின் இமயமலை ஆலயத்திற்குச் செல்லும் வழியில் உள்ள கடைசி வாகனம் செல்லக்கூடிய கிராமமாகும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் வெள்ளத்திற்குப் பிறகு, வருடாந்திர யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“மச்சைல் மாதா யாத்திரையின் தொடக்கப் புள்ளியான கிஷ்த்வாரில் உள்ள சஷோதி பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன,” என்று மூத்த காவல் கண்காணிப்பாளர் நரேஷ் சிங்குடன் இணைந்து, மேகமூட்டம் பாதித்த பகுதிக்குச் சென்று கொண்டிருக்கும் துணை ஆணையர் கிஷ்த்வார் பங்கஜ் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக திட்டமிடப்பட்டிருந்த கலாசார நிகழ்வுகளையும், நாளை மாலையில் தனது வீட்டில் நடைபெற இருந்த “அட் ஹோம்” தேநீர் விருந்து உபசாரத்தையும் முதலமைச்சர் உமர் அப்துல்லா இரத்து செய்தார்.

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஏற்பட்ட சோகத்தைக் கருத்தில் கொண்டு, நாளை மாலை “அட் ஹோம்” தேநீர் விருந்தை இரத்து செய்ய முடிவு செய்துள்ளேன்.

காலை சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது கலாச்சார நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

முறையான நிகழ்வுகள் – உரை, அணிவகுப்பு போன்றவை திட்டமிட்டபடி நடைபெறும்,” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

தென் கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

காசெம் சுலேமானீ கொலையினை பென்டகன் உறுதிப்படுத்தியது

நேபாள பேருந்து விபத்தில் பலர் பலி!