அரசியல்உள்நாடு

சொத்து விபரங்கள் அனைத்தும் பொய் – அரசியல் இலாபத்துக்காக மக்களை ஏமாற்றியிருக்கின்றனர் – துமிந்த திஸாநாயக்க

அரசியலுக்கு அப்பால் எந்தவொரு வருமான மூலமும் அற்ற மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி.) எவ்வாறு இந்தளவுக்கு கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்க முடியும்? ஜே.வி.பி.யினரின் உண்மையான முகம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாகாணசபைத் தேர்தலில் இதற்கான பதிலையும் வழங்க வேண்டும். எனவே விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆளுந்தரப்பினரின் சொத்து விபரங்கள் குறித்து நாடு அதிர்ச்சியடைந்துள்ள போதிலும், நாம் அதிர்ச்சியடையவில்லை.

காரணம் ஜே.வி.பி.யினருக்குள்ள சொத்து விபரங்களை ஏற்கனவே நாம் அறிவோம். எவ்வாறிருப்பினும் தற்போது இது குறித்து மக்களுக்கு தெரியவந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

ஜே.வி.பி.யைத் தவிர வேறு எந்த கட்சியினரும் தாம் வறுமையிலிருப்பதாகக் கூறியதில்லை.

ஆனால் இவர்கள் தம்மால் புதிய ஆடைகளைக் கூட வாங்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தனர். இன்று வெளியாகியுள்ள சொத்து விபரங்கள் இவை அனைத்தும் பொய் என்பதை நிரூபித்துள்ளன.

இவை பொய் என்பதற்கு அப்பால் மக்களை எந்தளவுக்கு ஏமாற்றியிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

தமது அரசியல் இலாபத்துக்காக மிகக் கீழ்தரமாக மக்களை ஏமாற்றியிருக்கின்றனர்.

எம்மால் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தால் இவர்களின் உண்மையான முகங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

இவர்கள் அமைச்சர்களுக்குரிய சம்பளத்தைப் பெறுவதில்லை எனக் கூறுகின்றனர். அமைச்சர்களின் சம்பளம் திறைசேரியில் மீதப்படுத்தப்படவில்லை.

மாறாக ஜே.வி.பி. கட்சி நிதியத்தில் சேமிக்கப்படுகிறது. சம்பளத்தை கட்சிக்கு வழங்கிவிட்டு அதற்கும் அதிகமான வருமானத்தை ஏதோ ஒரு வழியில் இவர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அரசியலுக்கு அப்பால் எந்தவொரு தொழிலும் அற்ற இவர்களால் எவ்வாறு இந்தளவுக்கு கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்க முடியும்? மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மாகாணசபைத் தேர்தலில் இதற்கான பதிலை மக்கள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

அரசாங்கத்துக்கு எதிரான எமது வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு சகல சுதந்திர கட்சி ஆதரவாளர்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.

விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். தாம் கூறுவதை செய்பவர்கள் என்பது உண்மையெனில் முடிந்தளவு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று நம்புகின்றோம்.

தேர்தலுக்கு தயாராவதற்காக கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். மாகாணசபைத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

editor

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இளங்குமரன் எம்.பியை சந்தித்த பிரதமர் ஹரிணி

editor

பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் -பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது