உள்நாடுபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு – மொத்த எண்ணிக்கை 141 ஆக உயர்வு!

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் நேற்று (05) (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.

“தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இரண்டு மனிதப் புதைகுழிகளிலும் அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்டப் பணிகளுக்காக நீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட 45 நாட்களில், நேற்று 31 ஆவது நாளாகப் பணிகள் நடைபெற்றன.

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றுவரை 65 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நேற்று அகழ்ந்தெடுக்கப்பட்ட 4 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, இதுவரை மொத்தமாக 130 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இதுவரை கட்டம் கட்டமாக 40 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம், தற்போதுள்ள இரண்டு மனிதப் புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு புதைகுழிகள் உள்ளனவா என்பதனைக் கண்டறியும் நோக்கில், தரையை ஊடுருவும் ராடர் (G.P.R. Scanner) மூலம் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வு முடிவுகள், மேலதிக அகழ்வுப் பணிகளுக்கு வழிகாட்ட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

புலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்களை ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு

தனியாரிடம் உள்ள அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் போலியானவை

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றிலும் பிணை