உள்நாடு

சீதாவக்வை பிரதேச செயலக முன்னாள் மேலதிகப் பதிவாளருக்கு விளக்கமறியல்!

துபாயில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவுக்கு போலியான பிறப்புச் சான்றிதழைத் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சீதாவக்கை பிரதேச செயலகத்தின் முன்னாள் மேலதிக பதிவாளரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க நேற்று (24) உத்தரவிட்டார்.

சீதாவக்கை பிரதேச செயலகத்தின் முன்னாள் மேலதிக பதிவாளர் டோனா ருவானி வாசனா என்ற பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சந்தேக நபர் சீதாவக்கை பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவத்தில் அவர் ஒன்பதாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரி நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கடத்தல் விசாரணைப் பிரிவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நேற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக சாட்சியமளித்த குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பாக ஆஜரான அதிகாரிகள், சந்தேக நபரான முன்னாள் பதிவாளர், ‘மந்திரம் பத்மசிறி பெரேரா’ என்ற போலி பெயர் மற்றும் கோப்பு எண்ணை உருவாக்கி, கெஹல்பத்தர பத்மேவுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவதற்காக 2024 ஜனவரியில் போலி பிறப்புச் சான்றிதழை வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்தப் போலி பிறப்புச் சான்றிதழைத் தவிர, சந்தேக நபர் போலி கோப்பு எண்களைப் பயன்படுத்தி வேறு போலி பிறப்புச் சான்றிதழ்களைத் தயாரித்து வெளியாட்களுக்குக் கொடுத்துள்ளதாகவும் இந்த மோசடிச் செயல்களுக்கு உயர் அதிகாரிகளின் முத்திரைகளைக் கூடப் பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதால், சந்தேக நபரான பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

சந்தேக நபரின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வருமாறு அனுப்பப்பட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக தனது கட்சிக்காரர் குற்றப் புலனாய்வுத் துறைக்குச் சென்றதாகவும், அத்தகைய வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

பாணந்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

editor

பொலிஸ் அதிகாரிகளைப்போல் மாறுவேடத்தில் சென்று கொள்ளை

அடாவடித்தனமாக கைது செய்யப்படும் முத்து நகர் விவசாயிகள்.

editor