முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்களை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பந்தமாக பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற விடயத்தை தாம் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் அவற்றை சமர்ப்பித்ததன் பின்னர், நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை,ஏற்கனவே விசாரணைகளில் வெளிவந்த அல்லது கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்பதை குறிப்பிட்ட அவர், தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், விசாரணைகளில் பெற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.