உள்நாடு

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் – பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வீதியில் ஓடிக்கொண்டிருந்த டிப்பர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளது.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் டிப்பருடன் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு, முன்னால் சென்ற லொறி மற்றும் காருடன் மோதி பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

இந்நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக ஹபரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை திருகோணமலை வீதியில் கல்ஓயா பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் நேற்று (26) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்தில் பொலிஸார் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தின் போது மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர், காரில் இருந்த பெண் மற்றும் 4 மாத குழந்தை, லொறியின் சாரதி ஆகியோர் காயமடைந்து ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் ஹபரணை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கல்ஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 56 வயதான கந்தளாய், பதியாகம பிரதேசத்தில் வசித்து வந்த பொலிஸ் சார்ஜன்ட் என்பது தெரியவந்துள்ளது.

சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அத்திமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு

மஹபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க பல்கலை மாணவர்கள் கோரிக்கை

SJB இனால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு