கல்வி அமைச்சின் 03/2019 சுற்றறிக்கைக்கு இணங்க, கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய மாணவர்களின் ஜனநாயக விழிப்புணர்வையும் தலைமைத்துவத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், மூன்றாவது மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஏனைய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் பங்கெடுப்புடன் நடைபெற்ற இந்த மூன்றாவது மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை சபை செயலாளரும், அதிபருமான எம்.சி. நஸ்லின் றிப்கா அன்ஸார் உத்தியோகபூர்வமாக தொடக்கி வைத்தார்.
இவ்வமர்வில் மாணவர் பாராளுமன்றத் தலைவரும் (சபாநயகர்) பிரதமர், அமைச்சர்கள், சபை பிரதானிகள், உறுப்பினர்களும் தங்கள் பொறுப்புகளை உணர்வுடன் நிறைவேற்றினர். கல்வி, விளையாட்டு, கலாச்சாரம், சமூக சேவை, ஒழுக்கம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பான கருத்துக்களும் முன்மொழிவுகளும் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களினால் விவாதிக்கப்பட்டன.
அமர்வில் கலந்து கொண்ட அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள் மாணவர்களின் ஜனநாயக பங்களிப்பு மற்றும் பொறுப்புணர்வை பாராட்டி, எதிர்காலத் தலைமைத்துவ வளர்ச்சிக்கு இது போன்ற நிகழ்வுகள் முக்கிய பங்காற்றுவதாகத் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வு, மாணவர்களுக்கு கருத்து தெரிவிக்கும் சுதந்திரம், ஒருங்கிணைந்த செயல் திறன், ஜனநாயக மரபுகள் ஆகியவற்றை அனுபவபூர்வமாக கற்றுத் தரும் வகையில் அர்த்தமிக்க ஒரு தளமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
-நூருல் ஹுதா உமர்