ஐஸ்’ போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பத் மனம்பேரியை, மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பியல் மனம்பேரி எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (24) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் மல்ஷா கொடிதுவக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு சார்பில் ஆஜரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் V.F.S.பெரேரா, இவ்வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சம்பத் மனம்பேரியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகள் குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளதாகத் தெரிவித்தார்.
அந்தத் தகவல்களுக்கமைய மேலும் சிலரைக் கைது செய்ய வேண்டியுள்ளதாலும், சந்தேக நபரிடம் இருந்து மேலதிக தகவல்களைப் பெற வேண்டியுள்ளதாலும், அவரை மேலும் 90 நாட்கள் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹர்ஷ ஜயலத், சம்பத் மனம்பேரியை தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், அவரிடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் கோரினார்.
அத்துடன் சந்தேக நபரிடம் இருந்த 3 வாகனங்கள் தற்போது சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை சந்தேகநபர் இந்த சட்டவிரோத சம்பவங்களுடன் தொடர்புபட்டு சம்பாதித்தவை என்பது இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்திருந்தால், அது தொடர்பான அறிக்கையையாவது நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவிடுமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
சந்தேக நபருக்கு எதிராக மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு வழங்கப்படுமாயின், அவரைப் பார்ப்பதற்கும் அவருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் சட்டத்தரணிகள் மற்றும் குடும்பத்தினருக்குத் தேவையான அனுமதியை வழங்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.
அதற்கமைய, இரு தரப்பு உண்மைகளையும் பரிசீலித்த வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடிதுவக்கு மேற்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
