அரசியல்உள்நாடு

சட்டங்கள் பலப்படுத்தப்பட்டு இனவாதம் தோற்கடிக்கப்படும் – ஜனாதிபதி அநுர

அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான உயிரூட்டத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு செய்வதற்கு இந்த நாட்டின் மகா சங்கத்தினர் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும்.

கல்னேவா மகாவலி மைதானத்தில் இன்று (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை ராமான்ய மகா பீடத்தின் 74 ஆவது உபசம்பதா மஹோத்சவத்தின் தொடக்க விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

உடல் ரீதியாக எட்ட வேண்டிய வெற்றிகள் போன்றே ஆன்மீக ரீதியாகவும் அடைய வேண்டிய பல சாதனைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்ட காலமாக இரக்கம், கருணை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட தர்மத்தைப் போதித்து, அந்த தர்மத்தை செவிசாய்த்த ஒரு நாட்டிற்கு இன்று நேர்ந்துள்ள நிலைமையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

எனவே, ஒழுக்கமான மற்றும் சிறந்த சமூகத்தை உருவாக்கும் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் தாமதமின்றி ஒன்றிணைந்து அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

பௌத்த மதத்தின் நிலைத்தன்மையைப் பேணுவதில் உபசம்பதா போன்றன மிகவும் முக்கியமானவை என்றும் அவர் கூறினார்.

மேலும், சில அரசியல் குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக அரசியல்வாதிகளன்றி வடக்கிலும் தெற்கிலும் உள்ள அப்பாவி பெற்றோர்களின் பிள்ளைகளே பலியானதாகவும் தெரிவித்தார்.

இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப பாடுபட வேண்டும் என்றும், அனைவருக்கும் ஜனநாயக ரீதியாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் திறன் இருந்தாலும், இனவாதம் மீண்டும் ஒருபோதும் தலைதூக்க அனுமதிக்கப் போவதில்லை என்றும் வலியுறுத்தினார்.

எனவே, இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்கு சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், சட்டங்கள் பலப்படுத்தப்பட்டு இனவாதம் தோற்கடிக்கப்படும் என்றும், சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

பிக்குமாரின் ஒழுக்கம் குறித்த கருத்தாடல் குறித்தும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.

அதில் மகாநாயக்க தேரர்கள் ஒரு பொதுவான ஒருமித்த கருத்தை எட்டினால் அந்த கருத்தாடலை அரசாங்கம் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும் என்றும் கூறினார்.

விஹார தேவாலகம் சட்டத்தின் 42 மற்றும் 43 ஆம் பிரிவுகளைத் திருத்துவதற்கான கோரிக்கை புத்தசாசன அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஏற்கனவே சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இங்கு உரை நிகழ்த்திய இலங்கை ராமான்ய மகா நிக்காயவின் மகாநாயக் தேரர் அதி வணக்கத்திற்குரிய மக்குலேவே ஸ்ரீ விமல தேரர், சாசனத்தில் மிகச் சிறிய குழுவினர் செய்த தவறான செயல்கள் சமூக ஊடகங்கள் மூலம் பெரிதுபடுத்திக் காண்பித்து முழு பிக்கு சமூகத்தையும் அவதூறு செய்யப்படுவதன் ஊடாக பக்தியுள்ள மக்கள் மகா சங்கத்திலிருந்து தூரமாக அது வழிவகுத்துள்ளதாகக் கூறினார்.

இந்த நாட்டின் பிக்கு சமூகத்தைப் பாதுகாப்பதிலும், நாட்டிற்குத் தேவையான பல்துறை மற்றும் ஒழுக்கமான பிக்குகளின் தலைமுறையை உருவாக்குவதிலும் இத்தகைய உபசம்பதா முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடமத்திய மாகாணத்தின் பிராந்திய பிக்கு சபைகள் மற்றும் உபசம்பதா மஹோத்சவ குழுவின் ஏற்பாட்டில் கலாவெவ, கலாகரம்பாவ மற்றும் ஸ்ரீ வித்யாதர மஹா பிரிவேனாவை மையமாகக் கொண்டு இவ்வருடம் ஸ்ரீலங்கா ராமான்ய மகா நிகாயாவின் உபசம்பதா நிகழ்வு இன்று (30) முதல் ஜூலை 08 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் ஸ்ரீலங்கா ராமான்ய மகா பீடம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், 1864 ஆம் ஆண்டு ஜூலை மாதம் காலி வெலிவத்தை விஜயானந்த பிரிவேனையை மையமாகக் கொண்டு மஹமோதர உதகுக்கேப பிரதேசத்தில் முதலாவது உபசம்பதா நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்த முறையும், பண்டைய பாரம்பரியத்தின்படி, இலங்கை ராமான்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரர் மகுலேவே ஸ்ரீ விமல தேரரின் தலைமையில் நடைபெற்றதோடு, 400 பிக்குகள் உபசம்பதா பெற்றனர்.

“சசுன” உபசம்ப மலர் , “பதிபதா” தொகுப்பு மற்றும் இலங்கை ராமான்ய மகா பீடத்தின் “உருமயக அபிமான” புத்தகம் ஆகியவையும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டன.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உன்னதமான மத மற்றும் ஆன்மீக சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கை ராமன்ய பீட பிக்குமார்களுக்கு கௌரவப் பட்டங்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

இலங்கை ராமான்ய மகா பீட முக்கிய மகாசங்கத்தினர் , புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி , வெளிநாட்டலுவல்கள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், வடமத்திய மாகாண ஆளுநர் ஜினதாச விமலசிறி, அநுராதபுர மாவட்டச் செயலாளர் கே.ஜி.ஆர். விமலசூரிய உள்ளிட்ட அரச அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், பொது மக்கள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சி போட்டி – வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்து

editor

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சி!