அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆகியோர் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்குக் கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள்.
ஆனால், அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.”
“பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும், அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது.”
“தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பௌத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது.”
“இக் கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
-கஜிந்தன்
