கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு ஓட்டமாவடி வட்டாரம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்வரின் தெரிவு சட்டபூர்வமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) தனது தீர்ப்பை அறிவித்தது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு ஓட்டமாவடி வட்டாரம் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அன்வர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அன்வர் அந்தப் பிரதேசத்துக்கு உட்பட்டவர் அல்ல என்பதாலும் தேர்தல் காலத்துக்கு முன்னரும் அவர் வெற்றியீட்டிய பிரதேசத்தில் வதிவிடத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதாலும் அவர் ஓர் உறுப்பினராக செயற்பட தகுதியற்றவர் என்று அறிவிக்குமாறும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவே இன்று தீர்ப்புக்கு வந்தது.
இந்த மனுவை அதே தொகுதியில் குறித்த தேர்தலில் போட்டியிட்ட சட்டத்தரணி ஹபீப் ரிபான் தாக்கல் செய்திருந்தார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவற்றுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படட எழுத்துமூல ஆவணங்களையும் கருத்தில் கொண்டு அன்வரின் தெரிவு முறையானது எனறும் மனுவை நிராகரித்து தீர்ப்பளித்தார்.
அன்வரின் சார்பில் சட்டத்தரணிகள் அஸாட் முஸ்தபா, ஹிக்மா யூசுப் ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் முன்னிலையானார்
மனுதாரர் தரப்பில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் முன்னிலையானார்.
-ஊடகப்பிரிவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
