கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கிய லீ மியான் (Miyon lee) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (27) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாட்டை விட்டு கொரியாவுக்கு தொழில் நிமித்தம் செல்லும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தூதுவரிடம் எடுத்துரைத்தார்.
2004 ஆம் ஆண்டு கொரியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் மொழிப் பரீட்சை உட்பட அனைத்து தகுதிகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தன.
சராசரியாக, ஒரு காலாண்டிற்கு சுமார் 1,500 முதல் 2,000 வேலைவாய்ப்புகள் இதன் மூலம் இலங்கைக்குக் கிடைத்து வந்தன.
2023 முதல் ஒரு காலாண்டிற்கு கிடைத்து வந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை இன்று 200 க்கும் குறைவாகவே அமைந்து காணப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டு கொரியப் பரீட்சைக்குத் தோற்றிய 5000 பேருக்கும் அதிகமானோர் இன்று அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதை காண முடிகின்றன என்பதனைச் சுட்டிக்காட்டி, தற்போதுள்ள தொழில்வாய்ப்பு ஒதுக்கீட்டை விட கூடிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை பாராளுமன்றத்திலும் கொரிய வேலைவாய்ப்பு பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தார்.
மேலும், இலங்கை தற்போது முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிகளில் மீளுவதற்குத் தேவையான ஆதரவைப் பெற்றுத் தருமாறும், இதற்காக, நாட்டிற்கு அதிக அளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு தொழில் புரிந்து வரும், தொழில்முறை திறமையான தொழிலாளர்களுக்கு அதிக தொழில்வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்குத் தேவையான ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், கடந்த காலங்களில் கொரியா ஒரு நாடாக இலங்கைக்குப் பெற்றுத் தந்த ஆதரவுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
