இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்ததன் பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன குறித்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேகநபர் காலி மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய போது, வேறு நபர் ஒருவரின் பெயரில் 3 வங்கிக் கணக்குகளை திறந்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழுவுடன் தொடர்புடையவர்கள், பொலிஸில் முறைப்பாடு செய்ய வருவோர் மற்றும் வேறு குற்றங்களில் ஈடுபடுவோரிடம் இருந்து இலஞ்சமாக பெற்றுக்கொண்ட 1 கோடியே 40 இலட்சம் ரூபாயை அந்த கணக்குகளில் பேணியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்தே இலஞ்சம், ஊழல் மற்றும் நிதிமோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் இன்று (14) முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.