அரசியல்உள்நாடு

கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

அமெரிக்க கேட்ஸ் அறக்கட்டளையின் (Bill & Melinda Gates Foundation) உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையேயான சந்திப்பு நேற்று (11) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர் கலாநிதி கிறிஸ் எலாயஸ், இது தனது இலங்கைக்கான முதல் விஜயம் என்றும், பாராளுமன்றத்தில் இந்த முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்க அழைப்பு விடுத்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

கலாநிதி எலாயஸ் மேலும் கூறுகையில், கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும், இந்நாட்டின் சிறுவர்களினதும் பெண்களினதும் ஊட்டச்சத்துத் தேவைகளை மேம்படுத்துதல், விவசாயத் துறையை மேம்படுத்துவதில் புதிய டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமது ஒத்துழைப்பை வழங்கக்கூடிய சாத்தியப்பாட்டைப் பற்றியும் தெளிவுபடுத்தினார்.

இதன்போது, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தாய்மார்களினதும், குழந்தைகளினதும் ஊட்டச்சத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதிலும், அதன் மூலம் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட மக்களை அதிலிருந்து மீட்டெடுக்க விசேட கவனத்துடன் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பாராட்டியதோடு, பிராந்தியத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டை முன்னெடுப்பதில் அறக்கட்டளையின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடினார்.

சிறுவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாடசாலைகளில் மதிய உணவு வழங்குதல் தொடர்பான அரசாங்க திட்டங்கள் குறித்து கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்திய பிரதமர், இந்த நாட்டின் சிறுவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கேட்ஸ் அறக்கட்டளையினால் வழங்கக்கூடிய உச்சக்கட்ட ஆதரவை தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் புதிய கல்வி முறையில் டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக கற்பித்தல், கற்றல், மதிப்பீடு மற்றும் கல்வி நிர்வாகம் ஆகியவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நிறுவப்பட்டிருக்கும் டிஜிட்டல் கல்விப் பணிக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பிரதமர், கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தார்.

அத்தோடு, டிஜிட்டல் கல்விப் பணிக்குழுவின் செயற்பாடுகளுக்கும், 2026 இல் ஆரம்பிக்கவிருக்கும் உத்தேச கல்விச் சீர்திருத்தத்திற்கும் கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவையும் பங்களிப்பினையும் பெற்றுத் தருவதின் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

இதன்போது, கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகள், கல்விச் சீர்திருத்தம் மற்றும் பணிக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒத்துழைப்பினை வழங்கக்கூடிய தரப்புகளின் பங்களிப்பினைப் பெற்றுத் தருவதாக பிரதமருக்கு உறுதியளித்தனர்.

இந்த விசேட சந்திப்பில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதன்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, கேட்ஸ் அறக்கட்டளையின் கொள்கை மற்றும் அரச தொடர்பாடலுக்கான பிராந்திய பிரதிநிதி கலாநிதி ஜமால் கான், கேட்ஸ் அறக்கட்டளையின் பணிப்பாளரும் நிகழ்ச்சித் திட்ட ஆலோசகருமான திருமதி அர்ச்சனா வியாஸ் மற்றும் அறக்கட்டளையின் பிற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Related posts

நான் எந்த தவறும் செய்யவில்லை – சபாநாயகர்.

புகையிரத சேவைகளில் தாமதம்

பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு!