உலகம்

காசாவில் பட்டினியால் மேலும் ஏழு பேர் பலி – 62,000 ஐ நெருங்கும் பலியானோர் எண்ணிக்கை

காசா நகரை கைப்பற்றும் திட்டத்தை அறிவித்திருக்கும் இஸ்ரேல் அங்குள்ள போர் வலயங்களில் இருந்து பலஸ்தீனர்களை தெற்கை நோக்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு தயாராகியுள்ளது.

இதனை நிராகரித்திருக்கும் பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ், ‘இது புதிய இனப்படுகொலைகள் மற்றும் இடம்பெயர்வுகளுக்கு வழிவகுக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

மறுபுறம் காசா போருக்கு எதிராக இஸ்ரேலின் பல இடங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

போர் வலயங்களில் உள்ள காசா மக்களை தெற்குக்கு இடம்பெயரச் செய்வதற்கு கூடாரங்கள் மற்றும் மற்ற தங்குமிட உபகரணங்கள் வழங்கப்படும் என்று இஸ்ரேல் இராணுவம் கடந்த சனிக்கிழமை (16) அறிவித்தது.

காசாவில் பிரதான நகராக உள்ள வடக்கு காசா நகரை கைப்பற்றும் திட்டத்தை அறிவித்த இஸ்ரேல் அண்மைய நாட்களாக அங்கு தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது வசிப்பதோடு இந்தத் திட்டத்திற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் வெளியாகி வருகின்றன.

எனினும் இந்தத் தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன்னர் போர் வலயமாக குறிப்பிட்டிருக்கும் காசா நகரில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று குறிப்பிட்டார்.

தற்காலிக தங்குமிட உபகரணங்கள் தெற்கு காசாயில் உள்ள கரம் ஷலோன் எல்லைக் கடவை ஊடாக ஐக்கிய நாடுகள் மற்றும் மற்ற சர்வதேச உதவி அமைப்புகள் மூலம் வழங்கப்படும் என்று இஸ்ரேல் கூறியது.

எனினும் இஸ்ரேலின் திட்டம் குறித்து கவலையை வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் இந்தத் திட்டம் வேதனைகளை மாத்திரமே அதிகரிக்கும் என்று கூறியது.

எனினும் தற்காலிக முகாம்கள் அவசியம் என்று இஸ்ரேல் ஏற்றிருப்பது வரவேற்கத்தக்கது அந்த ஐ.நா. அமைப்பு தெரிவித்தது.

காசா நகரை கைப்பற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டால், ஏற்கனவே பயங்கரமான மனிதாபிமான நிலைமைகளைச் சந்தித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அதன் உச்ச கட்டத்தை எட்டக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கடந்த வியாழக்கிழமை எச்சரித்திருந்தது.

இஸ்ரேல் கூறும் தெற்கு காசா உட்பட காசாவின் எந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை என்று; ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பலஸ்தீனர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தற்காலிக முகாம்களை வழங்குவதாக இஸ்ரேல் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, ஆக்கிரமிப்புப் படை தயாராகி வரும் கொடிய குற்றங்களை மறைப்பதற்கான ஏமாற்று வேலை என்று தெரிவித்துள்ளது. காசா நகர் ஹமாஸ் அமைப்பின் கோட்டை என கருதப்படுகிறது.

‘பட்டினி, படுகொலைகள் மற்றும் வெளியேற்றங்களுக்கு மத்தியில் மக்களை தப்பி ஓட கட்டாயப்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரான தொடர்ச்சியான குற்றமாகும்.

காசாவில் குற்றவியல் நடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆக்கிரமிப்பால் செய்யப்படும் அன்றாட குற்றங்களிலிருந்து பிரிக்க முடியாதது,’ என்று ஹமாஸ் அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலியப் படை கடந்த ஒரு வாரத்தில் காசா நகரின் புறநகரங்களில் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

குறிப்பாக செய்தூன் மற்றும் ஷுஜயீ பகுதிகளில் இஸ்ரேலிய விமானங்கள் மற்றும் டாங்கிகள் கடுமையாக தாக்கி வருவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு காசாவின் செய்தூன் சுற்றுப்புறத்தின் அஸ்கவுலா பகுதியில் குழு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

காசா நகரின் கிழக்கில் அல் அலமி பள்ளிவாசலுக்கு அருகே வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் 47 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு அவர்களில் உதவி நாடிய 14 பேரும் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர 226 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 22 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 92 ஆயிரத்தை நெருங்கி 61,944 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 155,886 பேர் காயமடைந்துள்ளனர்.

ஐ.நா மற்றும் பிரதான தொண்டு அமைப்புகளுக்கு மாற்றாக இஸ்ரேலின் ஆதரவில் முன்னெடுக்கப்படும் உதவி விநியோக மையங்களில் உதவி நாடி வருபவர்கள் மீது இஸ்ரேலிய படை நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,938 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் முடக்கி இருக்கும் சூழலில் அங்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் நேற்று மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இரு சிறுவர்களும் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் காசா போர் ஆரம்பித்தது தொடக்கம் பட்டினியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்திருப்பதோடு இவர்களில் 110 சிறுவர்களும் அடங்குவர்.

இந்நிலையில் காசா போரை நிறுத்தி பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்பாட்டை எட்டக்கோரி இஸ்ரேலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

டெல் அவிவில் பணயக்கைதிகள் சதுக்கம் என அழைக்கப்படும் பகுதியில் பாரிய இஸ்ரேலிய கொடி ஒன்றுடன் நுற்றுக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர்.

டெல் அவிவ் மற்றும் ஜெரூவத்தை இணைக்கும் பிரதான பாதை உட்பட பல வீதிகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கியுள்ளனர். இதன்போது அவர்கள் டயர்களையும் தீவைத்துள்ளனர்.

பொது ஒழுங்குக்கு இடையூறு செய்ததற்காக 30 இற்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ததாக இஸ்ரேல் பொலிஸ் தெரிவித்துள்ளது.

‘போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் நேரம் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

இஸ்ரேல் ஸ்திரமான மத்திய கிழக்கை நோக்கி நகர்வதற்கு உதவ வேண்டும்’ என்று ஜெரூசலத்தில் நடந்த பேரணியில் பங்கேற்ற 54 வயது டொரோன் வில்பான் குறிப்பிட்டார்.

Related posts

ஜீப் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி – 5 பேர் காயம்

editor

புத்தாண்டில் குழந்தைகள் பிறப்பு: இந்தியா முதலிடம்

‘டெல்டா’ வை மடக்கும் ஸ்புட்னிக் வி