உலகம்

காசாவில் இஸ்ரேல் கடும் தாக்குதல் – பஞ்சம் அறிவிப்பு – போசணை குறைபாட்டால் மேலும் எட்டுப் பேர் பலி

காசா நகரின் புறநகரங்களில் இஸ்ரேலிய விமானங்கள் மற்றும் டாங்கிகள் கடந்த சனிக்கிழமை (23) இரவு தொடக்கம் கடும் தாக்குதல்களை நடத்தி கட்டடங்கள் மற்றும் வீடுகளை அழித்து வருவதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில் காசா நகரை கைப்பற்றும் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதில் இஸ்ரேலிய தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

செய்தூன் மற்றும் ஷெஜையா பகுதிகளில் இரவு முழுவதும் இடைவிடாது வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக பார்த்தவர்கள் விபரித்திருக்கும் அதேநேரம் அருகாமையில் உள்ள சப்ரா பகுதியில் செல் குண்டுகள் வீடுகள் மற்றும் வீதிகளை தகர்த்து வருகின்றன.

வடக்கே சிறு நகரான ஜபலியாவிலும் இஸ்ரேலிய குண்டுகளால் பல கட்டடங்களும் அழிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜபலியா பகுதியில் போராளிகளின் சுரங்கப்பாதைகளை அகற்றி அங்கு கட்டுப்பாட்டை பலப்படுத்துவதற்காக அந்த பகுதியில் படையினர் மீண்டும் போருக்கு திரும்பியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று (24) குறிப்பிட்டது.

இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கை மூலம் போரை மேலதிக பகுதிகளுக்கு விரிவுபடுத்த முடியுமாவதோடு இங்கு ஹமாஸ் ‘போராளிகள்’ போர் நடவடிக்கைக்கு திரும்புவதை தடுக்க முடியுமாவதாகவும் இஸ்ரேல் இராணுவம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

காசா நகரை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் இந்த மாத ஆரம்பத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.

அதனை ஹமாஸின் கடைசி கோட்டை என்றும் இஸ்ரேல் கூறியது. எனினும் போர் நிறுத்தம் ஒன்றுக்கு மத்தியஸ்த நாடுகளான கட்டார் மற்றும் எகிப்து முயன்று வரும் நிலையில் இந்த படை நடவடிக்கை அடுத்த சில வாரங்களில் இடம்பெறாது என்று நம்பப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் எதிர்ப்புகள் வெளியாகும் நிலையில், தாக்குதலை தொடர்வதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் நேற்று (24) வலியுறுத்தி இருந்தார்.

வெடிப்புச் சத்தங்கள் மற்றும் வானில் தீப்பிழம்புகள் வெளியாகும் நிலையில் மக்கள் அச்சத்தில் வெளியேறி வரும் அதேநேரம் மேலும் சிலர் வெளியேறுதை விட மரணிப்பது மேல் என்று குறிப்பிட்டுள்ளனர்.

காசாவின் இரண்டு மில்லியன் மக்களில் சுமார் பாதி அளவானவர்கள் தற்போது காசா நகரிலேயே தங்கியுள்ளனர். சில ஆயிரம் பேர் தமது உடைமைகளை சுமந்தபடி ஏற்கனவே நகரை விட்டு வெளியேறி உள்ளனர்.

‘நாட்களை எண்ணுவதை நிறுத்தி விட்டு எனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் காசா நகரில் எனது வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்’ என்று 40 வயதான மொஹமட் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

எந்த இடமும் பாதுகாப்பானதல்ல, ஆனால் அபாத்தில் இறங்க முடியாது. அவர்கள் திடீரென்று ஆக்கிரமிப்பை ஆரம்பித்தால், கடுமையான சூடு நடத்துவார்கள்’ என்று சாட் செயலி வழியாக அவர் குறிப்பிட்டார்.

என்ன நடந்தாலும் வெளியேறப்போவதில்லை என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். ‘நாம் வெளியேறப்போவதில்லை, அவர்கள் எமது வீடுகளுக்கு குண்டு வீசட்டும்’ என்று எட்டுப் பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த 31 வயது அயா என்ற பெண் தெரிவித்துள்ளார்.

தமக்கு கூடாரம் வாங்குதவதற்கு, போக்குவரத்துக்கு, உணவு வாங்குவதற்கு பணம் இல்லை என்றும் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், ‘நாம் பட்டினியிலும் பயத்திலும் இருக்கிறோம், எம்மிடம் பணம் இல்லை’ என்றார்.

காசா நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் உத்தியோகபூர்வமாக பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அது பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சர்வதேச பட்டினி கண்காணிப்பு நிறுவனம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.

காசாவில் போசணை குறைபாட்டால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று குறிப்பிட்டது.

இதன்மூலம் போர் ஆரம்பித்தது தொடக்கம் காசாவில் பட்டினியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 289 ஆக அதிகரித்திருப்பதோடு அவர்களில் 115 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இந்நிலையில் 22 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் காசா போரில் உயிரிழந்த பலஸ்தீனர் எண்ணிக்கை 62,686 ஆக அதிகரித்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 67 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக உதவிக்கு காத்திருந்த நிலையில் இஸ்ரேலிய படை நடத்திய தாக்குதல்களில் மேலும் 19 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் இவ்வாறான தாக்குதல்களில் பலியான பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 2,095 ஆக அதிகரித்திருப்பதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா மற்றும் பிரதான தொண்டு அமைப்புகளுக்கு மாற்றாக இஸ்ரேல் ஆதரவில் முன்னெடுக்கப்படும் உதவி விநியோக இடங்களில் கூடும் மக்கள் மீதே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

Related posts

இங்கிலாந்தில் வைரலாகும் ‘டெல்டா’

இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம் இன்று

பங்களாதேஷ் விமானம் விபத்து – இதுவரை 27 பேர் பலி – மேலும் 170 பேர் காயம்

editor