உலகம்

காசாவில் 44 நாட்களில் சுமார் 500 முறை இஸ்ரேல் போர் நிறுத்த மீறல் – 342 பேர் பலி

காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் கடந்த 44 நாட்களில் இஸ்ரேல் குறைந்தது 497 தடவைகள் போர் நிறுத்தத்தை மீறி இருப்பதோடு நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலப் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 342 பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயதானவர்களாவர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகத்தால் தொடர்ச்சியாகவும், திட்டமிட்ட வகையிலும் போர் நிறுத்தம் மீறப்பட்டு வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்’ என்று அந்த அலுவலகம் கடந்த சனிக்கிழமை (22) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இந்த மீறல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்ட மனிதாபிமான நெறிமுறையின் அப்பட்டமான மீறல்களாக உள்ளன.

இந்த வன்முறைகளில் சனிக்கிழமை இடம்பெற்ற 27 சம்பவங்களும் அடங்குவதோடு இதனால் 24 பேர் கொல்லப்பட்டதோடு 87 பேர் காயமடைந்தனர்’ என்று அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் போர் நிறுத்த மீறல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் ஹமாஸ் பிரதிநிதிகள் நேற்று (23) கெய்ரோவில் எகிப்து பாதுகாப்பு தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ஹமாஸ் வட்டாரத்தை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் காசாவின் பல இடங்களிலும் சரமாரி வான் தாக்குதல்களை நடத்தி இருந்தது.

இதில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

காசாவில் இஸ்ரேலியப் படை நிலைகொண்டிருக்கும் மஞ்சள் கோட்டு பகுதிக்குள் இஸ்ரேலியப் படையினரை இலக்கு வைத்து ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதல்களை அடுத்தே இந்த வான் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

‘பதிலடியாக, மூத்த ஹமாஸ் (உறுப்பினர்கள்) ஐவர் கொல்லப்பட்டனர்’ என்றும் அந்த அலுவலகம் கூறியது.

இஸ்ரேலிய படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறும் போராளிகளின் விபரத்தை வெளியிடும்படி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

காசா போர் நிறுத்தத்தை அமுல்படுத்த உடன்படிக்கையின் மத்தியஸ்தர்கள் மற்றும் அமெரிக்க நிர்வாகம் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஹமாஸ் அரசியல் பிரிவின் மூத்த உறுப்பினர் ஒருவரான இஸத் அல் ரிஷக் கோரியுள்ளார்.

‘ஒப்பந்தத்தைத் தவிர்த்து, மீண்டும் ஒரு அழிப்புப் போருக்குத் திரும்புவதற்கு இஸ்ரேல் நியாயங்களை உருவாக்கி வருகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இஸ்ரேல் தினசரி மற்றும் திட்டமிட்ட வகையில் உடன்படிக்கையை மீறி வருகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு காசாவில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இஸ்ரேலிய துருப்புகள் தனது நிலைகளை விரிவுபடுத்தி இருப்பதால் பல டஜன் பலஸ்தீன குடும்பங்கள் முற்றுகைக்குள் சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி, இஸ்ரேலிய படைகள் அடையாளம் இடப்படாத எல்லைகளாக மஞ்சள் கோடு பகுதிக்கு பின்வாங்க இணங்கியது.

இந்த மஞ்சள் கோடு பகுதியை மீறுவதாக கூறி இஸ்ரேலிய துருப்புகள் பலஸ்தீனர்கள் மீது கண்மூடித்தனமாக சூடு நடத்தி வருகின்றன.

இந்த மஞ்சள்கோடு காசாவின் பாதி அளவு நிலப்பரப்பை ஆக்கிரமிப்பதாக உள்ளது.

காசாவில் இஸ்ரேலிய துருப்புகள் நிலைகொண்டிருக்கும் இந்த மஞ்சள் கோட்டுப் பகுதியைத் தாண்டி இஸ்ரேலிய துருப்புகள் மேற்கை நோக்கி முன்னேறுவதாகவும் இது உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட எல்லையை மீறுவதாக உள்ளது என்றும் ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மறுபுறம் இஸ்ரேலியப் படை நிலைகொண்டிருக்கும் மஞ்சள் கோட்டு பகுதிக்குள் இருக்கும் கட்டடங்களை அது தொடர்ந்து தகர்த்து வருகிறது.

இவ்வாறு தென்கிழக்கு கான்யூனிஸ் பகுதியில் கடந்த சனிக்கிழமை பாரிய அளவில் கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடித்த காசா போரில் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 69,756 ஆக உயர்ந்திருப்பதோடு மேலும் 170,946 பேர் காயமடைந்துள்ளனர்.

Related posts

பிரேசிலில் கனமழை – 57 பேர் உயிரிழப்பு

மெளனம் கலைந்த சவூதி: அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராக சவூதி கண்டனம்!

Shafnee Ahamed

பங்களாதேஷில் நீருக்கடியில் போக்குவரத்து செய்யக்கூடிய சுரங்கப்பாதை