காசா நகரின் கிழக்கு பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் கடந்த செவ்வாய் இரவு தொடக்கம் கடும் தாக்குதல்களை நடத்திய நிலையில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க ஆதரவு போர் நிறுத்தத் திட்டத்தை புதுப்பிக்கும் வகையில் ஹமாஸ் தலைவர் கலீல் அல் ஹய்யா மீண்டும் கெய்ரோ திரும்பி இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
கட்டாரில் கடைசியாக இடம்பெற்ற மறைமுக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதை அடுத்து கடந்த ஜூலை இறுதியில் அந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
அமெரிக்கா முன்வைத்த 60 நாள் போர் நிறுத்தத்திற்கான இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புகள் பரஸ்பரம் குற்றம்சாட்டின.
அது தொடக்கம் காசாவை முழுமையாகக் கைப்பற்றும் புதிய படை நடவடிக்கை ஒன்றை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காசாவின் பெரும்பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி இருப்பதோடு பலஸ்தீன போராளிகள் மீள ஒருங்கிணைந்து கெரில்லா பாணியில் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வடக்கு காசாவில் மிகப்பெரிய நகருக்கு இஸ்ரேலியப் படை எவ்வாறு முன்னேறப் போகிறது என்பது தெளிவில்லாமல் உள்ளது.
சுமார் கடந்த இரண்டு ஆண்டு தாக்குதல்களில் இந்த நகர் தற்போது இடிபாடுகளாக மாறியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருக்கும் காசாவில் இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தும் திட்டம் எதிர்வரும் ஒக்டோபரில் ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக காசாவில் பேரழிவுகள் மற்றும் பட்டினி மரணங்கள் அதிக அவதானத்தை பெற்றுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பில் இஸ்ரேல் இராணுவத் தளபதியே எச்சரிக்கை விடுத்திருப்பதோடு இது காசாவில் எஞ்சியுள்ள பணக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் இஸ்ரேலியப் படைகளுக்கான மரணப் பொறியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது காசா நகரை ஒட்டி தற்போது தங்கியுள்ள சுமார் ஒரு மில்லியன் பலஸ்தீனர்கள் மீண்டும் ஒரு முறை வெளியேற்றப்பட வழிவகுப்பதோடு மேலும் உயிரிழப்புகள் மற்றும் அழிவுகளை ஏற்படுத்தும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
காசா நகரின் கிழக்கு பகுதியில் திங்கள் இரவு தொடக்கம் இஸ்ரேலிய போர் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருப்பவர்கள் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தூன் புறநகர் பகுதியில் இரு வீடுகள் தாக்கப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டிருப்பதோடு நகர மையத்தில் தொடர்மாடி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் நால்வர் பலியாகியுள்ளனர்.
தெற்கு காசாவிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு கான் யூனிஸ் நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இடம்பெற்ற தாக்குதலில் ஒரு தம்பதி மற்றும் அவரது குழந்தை உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேபோன்று அருகாமையில் உள்ள கடற்கரையோர பகுதியான மவாசியில் கூடாரம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் நால்வர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 89 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு அவர்களில் 31 பேர் உதவிக்குக் காத்திருந்த நிலையில் இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதல்களில் பலியாகி இருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தவிர இந்தக் காலப்பகுதியில் மேலும் 513 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
முந்தைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட நிலையில் இடிபாடுகளில் இருந்து மேலும் பதினொரு சடலங்களை மீட்டதாகவும் அந்த அமைச்சு நேற்று டெலிகிராமில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் காசா போரில் கொல்லப்பட்டிருக்கும் பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 61,599 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 154,088 பேர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக ஐ.நா. மற்றும் பிராதன தொண்டு அமைப்புகளுக்கு மாற்றாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவில் கடந்த மே 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காசா உதவி விநியோகத்தில் அந்த உதவிகளை பெற கூடும் மக்கள் மீது இஸ்ரேலியப் படை அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருவதோடு அவ்வாறான தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 1,838 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 13,409 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மறுபுறம் காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடந்த 24 மணி நேரத்தில் இரு குழந்தைகள் உட்பட மேலும் ஐவர் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மரணங்களுடன் காசாவில் போர் ஆரம்பித்தது தொடக்கம் பட்டினியில் மரணித்தவர்கள் எண்ணிக்கை 227 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 103 பேர் சிறுவர்களாவர்.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதற்கு தயாராகி வருவதாக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் அறிந்த பலஸ்தீன அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை வாபஸ் பெறுவது மற்றும் ஹமாஸ் ஆயுதத்தை களைவதற்கான கோரிக்கை உட்பட இரு தரப்புக்கும் இடையிலான முரண்பாடு அதிகரித்துள்ளது.
பலஸ்தீன நாடு ஒன்று உருவாக்கப்படும் முன்னர் ஆயுதத்தை கைவிடுவதை ஹமாஸ் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.