உலகம்

காசா நகர் முழுவதையும் கைப்பற்றும் தரைவழித் தாக்குதல் ஆரம்பம் – இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

காசா நகர் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ள தரைவழித் தாக்குதலின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியுள்ளதாகவும், நகரின் புறநகர் பகுதிகளை ஏற்கெனவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கான களத்தை அமைப்பதற்காக, செய்தூன் மற்றும் ஜபலியா பகுதிகளில் படைகள் ஏற்கெனவே செயல்பட்டு வருவதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக, செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 மேலதிக வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இது களப்பணிக்குத் தேவையான வீரர்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும்.

அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான கொடூரமான போரைத் தொடர்வதற்கு ஆதரவாக இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தடையாக இருப்பதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்திற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில், காசா நகரில் வசிக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் காசாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலின் திட்டத்தை அதன் பல நட்பு நாடுகள் கண்டித்துள்ளன. இது “இரண்டு மக்களுக்கும் பேரழிவையே ஏற்படுத்தும். மேலும், நிரந்தரப் போர்ச் சுழற்சியில் இப்பகுதி முழுவதையும் தள்ளிவிடும்” என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், மேலும் அதிகமான மக்கள் இடம்பெயர்வதும், தாக்குதல்கள் தீவிரமடைவதும், காசாவின் 2.1 மில்லியன் மக்களுக்கான ஏற்கெனவே பேரழிவுகரமான சூழ்நிலையை மோசமாக்கும் என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு (ICRC) தெரிவித்துள்ளது.

Related posts

பிரித்தானிய அரசாங்கம் குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது

editor

பதவி ஏற்ற ஒரு வாரத்தினுள் பிரதமர் இராஜினாமா

கொவிட் 19 : உலகளவில் இதுவரை 228,224 பேர் பலி